அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கின


அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கின
x

சீர்காழி பகுதியில் பலத்த மழை பெய்ததால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

மயிலாடுதுறை
சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, கொள்ளிடம் ஆகிய பகுதிகளில் நேற்று காலை சுமார் 2 மணி நேரம் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சீர்காழி பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், கீழவீதி, தேர் வடக்கு வீதி, தென்பாதி, வ.உ.சி.தெற்கு தெரு, தேர் வடக்கு வீதி உள்ளிட்ட சாலைகளில் மழைநீர் ெபருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

விற்பனை பாதிப்பு

இதேபோல விநாயகர் சதுர்த்தியையொட்டி சிறிய அளவிலான விநாயகர் சிலைகள், பழங்கள், வாழை இலைகள், பூக்கள், தேங்காய், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை பாதிக்கப்பட்டதால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். ெரயில்வே ரோடு, விளக்கு முகத்தெரு, பஸ் நிலையம் உள்ளிட்ட சாலைகளில் தேங்கிய மழைநீரை பேரூராட்சி பணியாளர்கள் அகற்றி வருகின்றனர்.

நெற்பயிர்கள் மூழ்கின

இந்தநிலையில் சீர்காழி, கொள்ளிடம், திருவெண்காடு, வைத்தீஸ்வரன் கோவில், கொண்டல், மாதானம், ஆச்சாள்புரம், அகரஎலத்தூர், மங்கைமடம், நாங்கூர், நல்லூர், பழைய பாளையம், எடமணல் உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட குறுவை நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் மழை நீரில் மூழ்கின. குறிப்பாக கொண்டல், கொட்டாயமேடு, ஆதமங்கலம், பெருமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள வயல்கள் மழைநீரில் மூழ்கின. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் என்ன செய்வது என்று தெரியாமல் கவலையில் உள்ளனர்.

நனையும் நெல் மூட்டைகள்

இதேபோல சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ள குறுவை நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி வருகின்றன. நெல் மூட்டைகளை பாதுகாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Next Story