குறுவை சாகுபடிக்கான பயிர்க்காப்பீட்டு திட்டம் விரைவில் வெளியிடப்படும்- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்


குறுவை சாகுபடிக்கான பயிர்க்காப்பீட்டு திட்டம் விரைவில் வெளியிடப்படும்- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
x

குறுவை சாகுபடிக்கான பயிர்க்காப்பீட்டு திட்டம் விரைவில் வெளியிடப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்:-

குறுவை சாகுபடிக்கான பயிர்க்காப்பீட்டு திட்டம் விரைவில் வெளியிடப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.

ஆய்வுக்கூட்டம்

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், திருச்சி ஆகிய 7 மாவட்டங்களில் குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.

அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன், அரசு கொறடா கோவி.செழியன், வேளாண் உற்பத்தி ஆணையர் சமயமூர்த்தி, இயக்குனர் அண்ணாதுரை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் சீதாலட்சுமி, வேளாண் விற்பனைத்துறை பேராசிரியர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அனைவரையும் வரவேற்றார்.

மே மாதம் தண்ணீர் திறப்பு

கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் கடலூர், அரியலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் காவிரி நதி நீர் பாயும் சில பகுதிகளிலும் இயல்பாக 3.30 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி நடைபெறும்.

இந்த ஆண்டு பருவ மழைக்கு முன்பே டெல்டா மாவட்டங்களில் ரூ.80 கோடி மதிப்பீட்டில் 4 ஆயிரத்து 964 கிலோ மீட்டர் தூரத்துக்கு 683 தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் குறுவை சாகுபடிக்கு வழக்கமாக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந் தேதிக்கு முன்னதாக இந்த ஆண்டு மே மாதம் 24-ந் தேதியே தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

சாகுபடி பரப்புளவு உயரும்

இதனால் டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டை விட குறுவையில் 5.20 லட்சம் ஏக்கரும், சம்பாவில் 13.5 லட்சம் ஏக்கரும் சாகுபடி பரப்பளவு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சம்பா சாகுபடிக்கான முன்னேற்பாடுகளும் முன்கூட்டியே தொடங்கப்படுவதால் வடகிழக்கு பருவமழை காலத்தில் சம்பா பயிர்கள் வெள்ள நீரில் மூழ்காமல் காக்கப்படும். மேலும் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதால் மாற்றுப் பயிர் வகைகளும் அதிக அளவில் சாகுபடி செய்வதற்கான வாய்ப்பும் ஏற்படும்.

குறுவை தொகுப்பு திட்டம்

விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு இந்த ஆண்டும் ரூ.61 கோடி மதிப்பிலான குறுவை தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தின் மூலம் 3 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள். இதன் மூலமாக கடந்த ஆண்டு சாதனை அளவை விட இந்த ஆண்டும் அதிக பரப்பளவில் சாதனை எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பு குறுவை பருவத்துக்கு நெல் சாகுபடி மேற்கொள்ள திட்டமிடப்பட்டு குறுவை சாகுபடிக்கு தேவையான குறுகிய கால நெல் ரக விதைகள், உரங்கள், போன்ற இடுபொருட்களை போதிய அளவு இருப்பில் வைத்து நெல் நடவு எந்திரங்களைக்கொண்டு விரைவாக நடவுப்பணியை மேற்கொள்ள வேளாண்மைத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இலக்கை தாண்டும்

பாசன நீரினை சிக்கனமாக பயன்படுத்தும் நோக்கத்தில், கடைமடைப் பகுதிகளில் நேரடி நெல் விதைப்புப் பணி மேற்கொள்ள விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. எனவே நடப்பாண்டு இலக்கை தாண்டி கூடுதலாக சாகுபடி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள்

கூட்டத்தில் எம்.பி.க்கள் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், ராமலிங்கம், கல்யாணசுந்தரம், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், அண்ணாதுரை, பூண்டி கலைவாணன், நிவேதா முருகன், நாகை மாலி, பன்னீர்செல்வம், மேயர்கள் சண்.ராமநாதன் (தஞ்சை), சரவணன்(கும்பகோணம்) மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், திருச்சி மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், வேளாண்மை, கூட்டுறவு, உணவுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முடிவில் தஞ்சை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஜஸ்டின் நன்றி கூறினார்.

குறுவைக்கு பயிர்க்காப்பீடு

கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறுகையில், "குறுவை சாகுபடி தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் கூறிய கருத்துகள் அனைத்தும் முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று பரிசீலிக்கப்படும். கடந்தாண்டு குறுவை சாகுபடிக்கு பயிர்க்காப்பீடு திட்டம் செயல்படுத்தவில்லை. இந்த ஆண்டு நிச்சயம் குறுவைக்கு பயிர்க்காப்பீடு திட்டம் உண்டு. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும்" என்றார்.


Next Story