கல்குவாரி விபத்தில் சிக்கிய 6-வது நபரை தேடும் பணி தீவிரம்: நெல்லை கனிம வளத்துறை அதிகாரி பணியிடை நீக்கம்


கல்குவாரி விபத்தில் சிக்கிய 6-வது நபரை தேடும் பணி தீவிரம்:  நெல்லை கனிம வளத்துறை  அதிகாரி பணியிடை நீக்கம்
x

கல்குவாரி விபத்து தொடர்பாக நெல்லை கனிம வளத்துறை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்

திருநெல்வேலி

நெல்லை:

கல்குவாரி விபத்து தொடர்பாக நெல்லை கனிம வளத்துறை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

3 பேர் பலி

நெல்லை முன்னீர்பள்ளம் அருகே உள்ள அடைமிதிப்பான் குளம் பகுதியில் உள்ள கல்குவாரியில் ராட்சத பாறைகள் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இடிபாடுகளில் சிக்கி நாங்குநேரி அருகே உள்ள காக்கைகுளம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் (வயது 30), இளையநயினார்குளத்தைச் சேர்ந்த செல்வம் (27), ஆயன்குளத்தை சேர்ந்த முருகன் (23) ஆகிய 3 பேர் பலியானார்கள். விட்டிலாபுரத்தை சேர்ந்த முருகன் (40), நாட்டார்குளத்தை சேர்ந்த விஜய் (27) ஆகியோர் மீட்கப்பட்டு, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும் இடிபாடுகளில் சிக்கிய 6-வது நபரான நெல்லை தச்சநல்லூர் ஊருடையான்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (35) என்பவரை தேடும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

நில அளவை துறையினர் ஆய்வு

இந்த நிலையில் நேற்று காலை ராஜேந்திரனை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர். முன்னதாக நில அளவை துறை உதவி இயக்குனர் வாசுதேவன் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து நில அளவு குறித்து ஆய்வு செய்தனர்.

ராஜேந்திரன் ராட்சத பாறைகளுக்கு நடுவில் சிக்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் பாறைகளுக்கு வெடி வைத்து தகர்த்து, அவரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட உள்ளனர். ஆனால் அடிக்கடி லேசான மழை பெய்து வருவதால் மீட்புப்பணியில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

கலெக்டர் ஆய்வு

இதற்கிடையே மீட்பு பணிகளை நேற்று காலை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் கலெக்டர் விஷ்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

கல்குவாரியில் பாறைகள் சரிந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கிய ராஜேந்திரனை தேடும் பணி நடைபெற்று வருகிறது. மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் 2 பேர் கொடுத்த தகவலின் பேரில் பார்க்கும்போது சுமார் 100 டன் எடையுள்ள பாறைகளுக்கு அடியில் ராஜேந்திரன் சிக்கி இருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே அந்த பாறைகளை உடைத்து அப்புறப்படுத்தி அதன் பின்னர் அவரை மீட்கும் முயற்சியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

பணியிடை நீக்கம்

இந்த கல்குவாரி விபத்து தொடர்பாக கனிம வளத்துறை உதவி இயக்குனர் வினோத் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். குவாரியில் இருந்து வெளியே கல் கொண்டு செல்லும் நடை சீட்டு உரிமம் கடந்த ஏப்ரல் மாதமே ரத்து செய்யப்பட்டிருந்தது. மேலும் விபத்து நடந்த அடுத்த நாளான 15-ந் தேதியே கல்குவாரிக்கான குத்தகை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் தாலுகா வாரியாக குழு அமைக்கப்பட்டு ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை முறைகேடாக செயல்பட்ட குவாரிகள் மூடப்பட்டு சுமார் ரூ.20 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள சுமார் 55 கல்குவாரிகளை ஆய்வு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

யாராக இருந்தாலும் நடவடிக்கை

தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் கூறியதாவது:-

இந்த கல்குவாரி விபத்து தொடர்பாக நாங்குநேரி உதவி போலீஸ் சூப்பிரண்டு ரஜத் சதுர்வேதி தலைமையில், 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தலைமறைவாகி உள்ள கல்குவாரி உரிமையாளர்களை தேடி வருகிறோம்.

கல்குவாரி உரிமையாளர் செல்வராஜ் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. அவரது சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. அவருக்கு சொந்தமான திசையன்விளையில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகம் ஆகியவற்றில் சோதனை நடத்த போலீசார் ெசன்றுள்ளனர். இதில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story