4500 டன் நெல், அரிசி வெளிமாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பு
திருவாரூரில் இருந்து ஒரே நாளில் 4500 டன் நெல், அரிசி வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் தேசிய நெடுஞ்சாலைகளில் வரிசையில் நின்ற லாரிகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவாரூரில் இருந்து ஒரே நாளில் 4500 டன் நெல், அரிசி வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் தேசிய நெடுஞ்சாலைகளில் வரிசையில் நின்ற லாரிகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அரவை பணி
திருவாரூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நெல் மூட்டைகள் பொதுவினியோக திட்டத்தின் கீழ் அரிசியாக வழங்கிட மாவட்டத்தில் உள்ள அரசு அங்கீகரிக்கப்பட்ட அரவை மில்லுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கூடுதலான நெல் மூட்டைகள் சரக்கு ரெயில்கள் மூலம் பிற மாவட்டங்களுக்கு அரவைக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அதன்படி நேற்று திருவாரூரை சுற்றி உள்ள பகுதிகளில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகள் லாரிகள் மூலம் திருவாரூர் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு லாரிகளில் இருந்து நெல் மூட்டைகளை தொழிலாளர்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சரக்கு ரெயில் பெட்டிகளில் ஏற்றினர். பின்னர் 42 பெட்டிகளில் ஏற்றப்பட்ட 2 ஆயிரம் டன் நெல் திருச்சிக்கு அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு
இதைத்தொடர்ந்து திருவாரூரில் இருந்து சேலத்துக்கு பொது வினியோக திட்டத்தில் வழங்க 2500 டன் அரிசி அனுப்பி வைக்கும் பணி நடைபெற்றது. ஒரே நாளில் நெல், அரிசி வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதால் லாரிகள் எண்ணிக்கை அதிகரித்தது. இந்த லாரிகள் நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லை. இதனால் லாரிகள் திருவாரூர்- நாகை தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.