பாடி அடுத்த தாதங்குப்பத்தில் ராட்சத குழாய் உடைந்து சீறிப்பாய்ந்த கழிவுநீர்; வாகன ஓட்டிகள் அவதி
பாடி அடுத்த தாதங்குப்பத்தில் ராட்சத குழாய் உடைந்து சீறிப்பாய்ந்த கழிவுநீரால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
சென்னையை அடுத்த அம்பத்தூர், மாதவரம், கொரட்டூர், முகப்பேர், திருமங்கலம், கொளத்தூர், கோயம்பேடு சுற்றுவட்டார பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுநீர் கொடுங்கையூர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு ராட்சத குழாய் மூலம் பாடி, மாதவரம், மூலக்கடை வழியாக அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று காலை 11 மணியளவில் பாடி அடுத்த தாதங்குப்பம் பகுதியில் கழிவுநீர் செல்லும் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டது. அதன் வழியாக சுமார் 6 அடி உயரத்துக்கு சீறிப்பாய்ந்த கழிவுநீர், ரெட்டேரியில் இருந்து பாடி செல்லும் சாலையின் நடுவில் அருவிபோல் கொட்டியது. இதனால் அந்த சாலையை கடந்து செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் தவித்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அம்பத்தூர் மண்டல பகுதி பொறியாளர் தியாகராஜன் தலைமையிலான ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். முதல் கட்டமாக கழிவுநீர் வால்வை அடைத்து சாலையில் கழிவுநீர் வெளியேறுவதை தடுத்தனர். பின்னர் ராட்சத குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யும் பணியில் ஒப்பந்ததாரர்கள் உதவியுடன் ஈடுபட்டனர்.
அதிக பாரம் ஏற்றி வந்த கனரக வாகனம் அந்த சாலை வழியாக சென்றதால் பாரம் தாங்காமல் சாலையின் அடியில் அமைக்கப்பட்டு உள்ள ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.