படுகர் இன மக்கள் சக்கலாத்தி பண்டிகை கொண்டாட்டம்
கோத்தகிரி பகுதியில் படுகர் இன மக்கள் சக்கலாத்தி பண்டிகையை கொண்டாடினர்.
கோத்தகிரி,
கோத்தகிரி பகுதியில் படுகர் இன மக்கள் சக்கலாத்தி பண்டிகையை கொண்டாடினர்.
முன்னோர்களுக்கு படையல்
நீலகிரி மாவட்டத்தில் அட்டி என்று அழைக்கப்படும் கிராமங்களில் படுகர் இன மக்கள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர். கோத்தகிரி சுற்றுவட்டார கிராமங்களில் அவர்களது முக்கிய பண்டிகைகளில் ஒன்றான முன்னோர்களுக்கு படையல் இட்டு வழிபடும் சக்கலாத்தி பண்டிகை நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று முன்தினம் படுகர் இன மக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இறந்து போன தங்களது முன்னோர்களை வரவேற்கும் வகையில் அருகம்புல், கொதுங்கு, பிலிகிச்சை, உத்தரனை, ஹூம்ரி என்பது உள்ளிட்ட மூலிகை செடிகளை ஒன்றாக கட்டி தங்கள் வீடுகளின் கூரை மற்றும் மாட்டுத்தொழுவத்தின் கூரைகளில் காப்பு கட்டினர். இதனைத் தொடர்ந்து நேற்று மாலை 5 மணிக்கு தங்களது வீட்டில் உள்ள அடுப்பில் இருந்து எடுக்கப்பட்ட சாம்பலை பயன்படுத்தி வீட்டின் முன்புற வாசல்களில் நட்சத்திரம், சூரியன், சந்திரன் மற்றும் விவசாய கருவிகளின் படங்களை கோலமாக வரைந்தனர்.
பிடித்த உணவுகள்
பின்னர் தங்களது முன்னோர்களுக்கு பிடித்தமான உணவுகள் மற்றும் பலகாரங்களை படையல் இடுவதற்காக தங்கள் வீடுகளில் சமைத்தனர். பின்னர் அந்தந்த கிராமங்களில் உள்ள தொட்ட மனை என்று அழைக்கப்படும் வீட்டை சேர்ந்த ஒருவர் ஒரு பெரிய மண் சட்டியில் ஒவ்வொரு வீடாக சென்று முன்னோர்களுக்காக அவர்கள் தயாரித்த உணவுகளை சேகரித்தார்.
இதையடுத்து அந்த உணவுகளை, ஊருக்குப் பொதுவான ஒதுக்குப்புறமான இடத்தில் வைத்து முன்னோர்களுக்கு படையல் இட்டு வழிபடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6 மணிக்கு ஒவ்வொரு வீட்டில் இருந்தும் தலா ஒருவர் என ஏராளமானோர் கலந்துகொண்டு படையலிட்டு தங்களது முன்னோர்களை வழிபட்டனர்.