பள்ளி வளாகத்தில் தூக்கில் பிணமாக தொங்கிய பெயிண்டர்
வாணியம்பாடி அருகே பள்ளி வளாகத்தில் பெயிண்டர் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக அவருடைய தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
வாணியம்பாடியை அடுத்த சின்ன இளையநகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவர் வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:-
பெண்தர மறுப்பு
எனது மகன் சிவக்குமார் (வயது 29) என்பவர் பெயிண்டர் வேலை செய்து வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து உயிருக்கு போராடிய அவரை வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைக்கு பின்பு வீட்டிற்கு அழைத்து வந்தோம்.
இந்த நிலையில் எனது மகன் எதற்காக பூச்சி கொல்லி மருந்து குடித்தான் என்பது குறித்து அவரிடம் விசாரித்த போது எங்கள் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்து வைக்க வேண்டும் என கேட்டான். இது தொடர்பாக பெண் வீட்டாரிடம் சென்று நாங்கள் பெண் கேட்டோம். அவர்கள் பெணதர மறுத்து விட்டனர்.
தூக்கில் தொங்கினார்
அப்போது அங்கு இருந்த பெண்ணின் தந்தையும், அவரது அண்ணனும் எங்களை தகாத வார்த்தைகளால் திட்டி அசிங்கப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நேற்று காலை 11 மணிக்கு எனது மகன் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடத்தில் தூக்கில் தொங்கியபடி இறந்த நிலையில் கிடந்தான். அங்கு சென்று பார்த்த போது அவனது மார்பு பகுதியில் காயம் இருந்தது.
எனவே எனது மகனின் சாவில் சந்தேகம் உள்ளது. இதற்கு காரணமான பெண்ணின் தந்தை மற்றும் அவரது அண்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
காதலிக்கு திருமணம்
தன்னை காதலித்த பெண்ணுக்கு வருகிற 1-ந் தேதி திருமணம் நடைபெற இருப்பதால் மனம் உடைந்து தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதலில் போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் இறந்து போன சிவகுமாரின் தந்தை அளித்த புகாரின் பேரில் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.