ஓவிய ஆசிரியரின் வித்தியாசமான கிறிஸ்துமஸ் குடில்
தூத்துக்குடியில் ஓவிய ஆசிரியரின் வித்தியாசமான கிறிஸ்துமஸ் குடிலை பொதுமக்கள் கண்டுரசித்து வருகின்றனர்.
தூத்துக்குடி புனித லசால் மேல்நிலைப்பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருபவர் நி.இசிதோர் பர்னாந்து (58). இவர் தனது வீட்டில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, ஏசுவின் பிறப்பை சித்தரிக்கும் வகையில் வித்தியாசமான முறையில் குடில் அமைத்து வருகிறார். அந்த வகையில் 20-வது ஆண்டாக இந்த ஆண்டு ரஷ்யா உக்ரைன் போரினால் உருவாகியிருக்கும் உலக அமைதியின்மை நீங்கி உலக நாடுகளிடையே மீண்டும் சகோதரத்துவம் மேலோங்கிட வேண்டும் என்ற கருத்தை மையமாக வைத்தும், 'இரக்க உணர்வுடன் உலகை வழி நடத்துவோம்' என்ற கருத்தை வலியுறுத்தியும் கிறிஸ்துமஸ் குடிலை அமைத்து உள்ளார்.
மேலும் கூட்டுக்குடும்பம், முதியோர் மற்றும் பெற்றோரை அரவணைத்தல், வறியோருக்கு உதவி செய்தல், அன்னதானம், கண் தானம், உடல் உறுப்பு தானம் செய்தல் போன்றவற்றை வலியுறுத்தும் ஓவியங்களும் இடம் பெற்று உள்ளன. இதனை தவிர அவதார் பட கதாபாத்திரங்களும் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. இந்த கிறிஸ்துமஸ் குடிலை அந்த பகுதி மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பார்வையிட்டு செல்கின்றனர்.