பத்ரகாளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா


பத்ரகாளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா
x

திண்டுக்கல் மலையடிவாரம் பத்ரகாளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடந்தது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மலையடிவாரத்தில், இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா, கடந்த மாதம் 21-ந்தேதி சாமி சாட்டுதலுடன் தொடங்கியது. மேலும் 23-ந்தேதி திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பூச்சொரிதல், பூத்தேர் நகர்வலம், கரகம் அலங்கரித்து மின் அலங்கார தேர் பவனி, பால்குட ஊர்வலம், பொங்கல் வைத்தல், மாவிளக்கு போடுதல், பூக்குழி இறங்குதல், முளைப்பாரி ஊர்வலம் உள்ளிட்டவை நடைபெற்றன.

மேலும் தினமும் பத்ரகாளியம்மன், பேச்சியம்மன், சுடலைமாடசாமி ஆகிய தெய்வங்களுக்கு அபிஷேகம், தீபாராதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவில் நேற்று முன்தினம் பத்ரகாளியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு நடந்தது. இதையடுத்து நேற்று மதியம் 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் மாலை 6 மணிக்கு அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

அப்போது பத்ரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்துடன் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவில் உச்ச நிகழ்ச்சியாக இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு பத்ரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, வாணவேடிக்கையுடன் தெப்ப திருவிழா நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்துள்ளனர்.


Next Story