பழனி முருகன் கோவிலில், பஞ்சாமிர்தம் விலை திடீர் உயர்வு


பழனி முருகன் கோவிலில், பஞ்சாமிர்தம் விலை திடீர் உயர்வு
x

பழனி முருகன் கோவிலில், பஞ்சாமிர்தம் விலை திடீரென்று உயர்த்தப்பட்டது.

திண்டுக்கல்

பழனி முருகன் கோவிலில், பஞ்சாமிர்தம் விலை திடீரென்று உயர்த்தப்பட்டது.

பழனி பஞ்சாமிர்தம்

தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருவார்கள்.

இவ்வாறு வருகை தரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் உண்டு மகிழ இலவசமாக பஞ்சாமிர்தம் வழங்கப்படுகிறது. பழனி என்றாலே பஞ்சாமிர்தம் தான் முதலில் ஞாபகத்திற்கு வரும். இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆர்வமுடன் பஞ்சாமிர்தத்தை வாங்கி சாப்பிடுகின்றனர்.

மேலும் கோவில் நிர்வாகம் சார்பில், பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் பழனிக்கு வந்ததன் நினைவாக பஞ்சாமிர்தத்தை வாங்கி செல்கின்றனர்.

புவிசார் குறியீடு

இதையொட்டி பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் பழனி பஸ்நிலையம், அடிவாரம், மின்இழுவை ரெயில் நிலையம், மலைக்கோவில் வெளிப்பிரகாரம் என பல்வேறு இடங்களில் விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இங்கு டப்பா, டின் என இரண்டு வகைகளில் பஞ்சாமிர்தம் விற்கப்படுகிறது. அதாவது 500 கிராம் அளவில் டப்பாக்களில் விற்கப்படும் பஞ்சாமிர்தம் விலை ரூ.35-க்கும், டின்னில் விற்கப்படும் பஞ்சாமிர்தம் ரூ.40-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற பழனி முருகன் கோவில் பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது.

விலை உயர்வு

இந்தநிலையில் பழனி முருகன் கோவிலில் விற்கப்படும் பஞ்சாமிர்தம் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் நேற்று முதல் ரூ.5 விலை உயர்த்தப்பட்டு உள்ளது. அதாவது டப்பா பஞ்சாமிர்தம் ரூ.40-க்கும், டின் பஞ்சாமிர்தம் ரூ.45-க்கும் விற்கப்படுகிறது. இதனால் ஏற்கனவே தயாரான பஞ்சாமிர்த டப்பாக்களில் உள்ள விலையை பேனாவால் மாற்றி விற்பனை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது, "பழனி முருகன் கோவிலுக்கு வரும் வருமானத்துக்கு, திருப்பதியை போல் பக்தர் ஒருவருக்கு ஒரு டப்பா பஞ்சாமிர்தத்தை இலவசமாக வழங்கலாம். பக்தகர்களுக்கு தேவை இருந்தால், கூடுதல் டப்பாக்களை பணம் கொடுத்து வாங்கி செல்லலாம். ஆனால் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பஞ்சாமிர்தம் விலை உயர்த்தப்பட்டது கண்டனத்துக்கு உரியது" என்றனர்.


Next Story