பழனிசாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்
உடுமலை மத்திய பஸ்நிலையம் அருகே பழனிசாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுகிறது.இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழனிசாலை
உடுமலை மத்திய பஸ்நிலையம், உடுமலை- பழனி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. பொள்ளாச்சி சாலையில் இருந்து வரும் பஸ்கள் பை-பாஸ் சாலை வழியாக மத்திய பஸ்நிலையத்திற்கு வரும்.
மற்றபடி பை-பாஸ் சாலையில் வரும்லாரி, கார், வேன்கள் உள்ளிட்ட வாகனங்கள் மத்திய பஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள பை-பாஸ் சாலை வழியாக ரவுண்டானா அருகில் பழனி சாலையில் வந்து இணையும். இவ்வாறு இணையும் இடத்தில் 15 பஸ்கள் நின்று செல்லும் வகையில் கூடுதல் பஸ் நிலையம் கட்டுவதற்கான கட்டிட கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.
கனரக வாகனங்கள்
இந்த நிலையில் ரவுண்டானா அருகே திரும்பும் இடத்தில் இருந்து பழனிசாலையில் கனரக வாகனங்கள் மற்றும் லாரிகள், வேன்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்படுகின்றன.
அதனால் அந்த பகுதியில் வாகன போக்குவரத்துக்கு இடையூறாகி, வாகன ஓட்டுனர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்னர். அதனால் ரவுண்டானாவிற்கு கிழக்குபுறம் பழனிசாலையில் வாகனங்களை நிறுத்துவதற்கு சம்பந்தப்பட்ட போக்குவரத்து மற்றும் காவல்துறை அதிகாரிகள் தடைவிதிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடு்த்துள்ளனர்.