பழனிசெட்டிபட்டி மருந்துக்கடை உரிமையாளர் வீட்டில் கைவரிசை:'பலே கொள்ளையர்கள்' 2 பேர் கைது:22½ பவுன் நகை, பணம் மீட்பு


பழனிசெட்டிபட்டி மருந்துக்கடை உரிமையாளர் வீட்டில் கைவரிசை:பலே கொள்ளையர்கள் 2 பேர் கைது:22½ பவுன் நகை, பணம் மீட்பு
x
தினத்தந்தி 19 Feb 2023 12:15 AM IST (Updated: 19 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பழனிசெட்டிபட்டி மருந்துக்கடை உரிமையாளர் வீட்டில் கதவை உடைத்து திருடிய ‘பலே கொள்ளையர்கள்' 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 22½ பவுன் நகைகள், ரூ.50 ஆயிரத்தை போலீசார் கைப்பற்றினர்.

தேனி

நகை, பணம் கொள்ளை

தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டி அரசு நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் அகஸ்டின். இவர் மருந்துக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி வனஜா (வயது 54). இவர், மனோதத்துவ நிபுணராக உள்ளார்.

கடந்த 11-ந்தேதி வனஜா தனது வீட்டை பூட்டிவிட்டு, ஏற்காட்டில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வரும் தனது மகளை பார்க்கச் சென்றார். பின்னர் மறுநாள் நள்ளிரவில் தனது வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டுக்குள் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

தனது வீட்டில் 31 பவுன் நகைகள், ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள், ரூ.90 ஆயிரம் ஆகியவை திருடு போனதாக பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் வனஜா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

2 பேர் கைது

கொள்ளையர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கர்ணன், நாகராஜன், ஏட்டுகள் கணேசன், செல்வம், விஜய் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் நடத்திய புலன் விசாரணையில், தேனி அல்லிநகரம் பாண்டியன் கோவில் தெருவை சேர்ந்த சோனி என்ற சோனிராஜா (57) மீது சந்தேகம் எழுந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள மாவிலிபட்டியை சேர்ந்த அழகர்சாமி (32) என்பவருடன் சேர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்தார். பின்னர் அவர் மறைத்து வைத்து இருந்த 22½ பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம், 7 வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். இந்த வழக்கில் அழகர்சாமியையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் இருவரையும் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். விசாரணையை தொடர்ந்து அவர்கள் இருவரையும் தேனி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி தேக்கம்பட்டி சிறையில் போலீசார் அடைத்தனர்.

பலே கொள்ளையர்கள்

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், "கொள்ளைபோன அனைத்து நகையும் மீட்கப்பட்டன. அவற்றின் எடை 31 பவுன் என்று முதலில் கூறப்பட்டது. பின்னர் அவற்றின் எடையை சரிபார்த்தபோது, அவை 22½ பவுன் என தெரியவந்துள்ளது. கைதான சோனிராஜா மீது தமிழகத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் 50-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன. அழகர்சாமி மீது 10 திருட்டு வழக்குகள் உள்ளன.

பலே கொள்ளையர்களான இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை சிறையில் இருந்தபோது பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாகி உள்ளனர். நண்பர்களாகி ஒன்றாக இணைந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நிலையில் கைதாகி உள்ளனர்" என்றனர். கொள்ளையர்களை பிடித்த தனிப்படையினருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே பாராட்டு தெரிவித்தார்.


Related Tags :
Next Story