பாளையங்கோட்டை மத்திய சிறை வார்டன் பணியிடை நீக்கம்
பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிக்கு செல்போன் பயன்படுத்த உதவிய சிறை வார்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிக்கு செல்போன் பயன்படுத்த உதவிய சிறை வார்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
மத்திய சிறை
நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் 319 ஆயுள் தண்டனை கைதிகள், 114 தண்டனை கைதிகள், 405 விசாரணை கைகள், 297 குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட கைதிகள், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஒரு கைதி, தூக்கு தண்டனை கைதி ஒருவர், 4 திருநங்கைகள், முதல்வகுப்பு கைதிகள் 3 பேர் என மொத்தம் 1,144 கைதிகள் உள்ளனர். சிறையில் தடை செய்யப்பட்ட செல்போன் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைதிகளுக்கு தாராளமாக கிடைப்பதாக உயர் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மேலும் சிறையில் இருந்தே கைதிகள் செல்போனில் தொடர்பு கொண்டு வெளியில் குற்ற சம்பவங்களை அரங்கேற்றுவதாக புகார் எழுந்தது.
செல்போன் பறிமுதல்
இதையடுத்து சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி உத்தரவின்பேரில், பாளையங்கோட்டை மத்திய சிறையில் சிறைத்துறையினர், போலீசார் இணைந்து அதிரடி சோதனை நடத்தினர். இதில் சிறையில் ஒரு கைதி செல்போன் பயன்படுத்தியது தெரிய வந்தது. அந்த செல்போனை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி விசாரணை நடத்தினார். விசாரணையில், சிறையில் கைதி செல்போன் பயன்படுத்துவதற்கு வார்டன் அருண் பாண்டியன் உதவியது தெரியவந்தது. எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு சிறைத்துறை டி.ஜி.பி.க்கு அறிக்கை தாக்கல் செய்தார்.
பணியிடை நீக்கம்
இதையடுத்து பாளையங்கோட்டை மத்திய சிறை வார்டன் அருண் பாண்டியனை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை டி.ஜி.பி. அம்ரேஷ் புஜாரி உத்தரவிட்டார்.