கும்பகோணம் பகுதியில் நுங்கு விற்பனை அமோகம்


கும்பகோணம் பகுதியில் நுங்கு விற்பனை அமோகம்
x

வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதை தொடர்ந்து கும்பகோணம் பகுதியில் நுங்கு விற்பனை அமோகமாக நடப்பதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

தஞ்சாவூர்

கும்பகோணம்;

வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதை தொடர்ந்து கும்பகோணம் பகுதியில் நுங்கு விற்பனை அமோகமாக நடப்பதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

நுங்கு

கோடைக்காலத்தில் நுங்கு சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான நீர்ச்சத்து கிடைக்கிறது. மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, நுங்கில் பலவிதமான நன்மைகள் உள்ளன. உடலில் கனிமச்சத்து, சர்க்கரையின் அளவை சீராக வைத்து, சுறுசுறுப்புடன் செயல்படுவதற்கு நுங்கு பெரிதும் உதவுகிறது.நுங்கில் வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்களும் நிறைந்துள்ளன. உடல்வெப்பத்தை தணிக்கும் ஆற்றல் கொண்டது. இதன்காரணமாக கோடை காலத்தில் நுங்கு விற்பனை தீவிரமாக நடக்கும்

பொதுமக்கள் ஆர்வம்

வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக கும்பகோணம் பகுதியில் புதிதாக சாலையோரங்களில் ஆங்காங்கே நுங்கு கடைகள் போடப்பட்டுள்ளன. சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க நுங்கை பொதுமக்கள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.இதனால் கும்பகோணம் பகுதியில் நுங்கு விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுகுறித்து கடம்பங்குடியை சேர்ந்த வியாபாரி தர்மன் கூறுகையில்:-

நான் கடந்த 10 ஆண்டகளாக நுங்கு விற்பனை செய்து வருகிறேன். ஆண்டுக்கு ஆண்டு நுங்கை விரும்பி சாப்பிடும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் என்னை போன்ற சிறு வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து வருகிறோம்.

நல்ல லாபம்

தற்போது ஒரு முழு நுங்கு ரூ.10- முதல் ரூ.15-க்கு விற்பனை செய்கிறோம். குழந்தைகள் நுங்கை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். கோடை விடுமுறை என்பதால் வீடுகளில் உள்ள குழந்தைகளுக்கு நுங்கை அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.மேலும், இருசக்கர வாகனங்கள், கார்களில் வருபவர்கள் என அனைத்து தரப்பினரும் நுங்கை வாங்கி செல்கின்றனர். இதனால் நுங்கு விற்பனை விறுவிறுப்பாக நடக்கிறது போதிய வருமானமும், லாபமும் கிடைக்கிறது என தெரிவித்தார்.


Next Story