கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் நடைபெற்றது.
ஆறுமுகநேரி:
கோவில்பட்டி, ஆறுமுகநேரி, பழைகாயல் பகுதி கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று குருத்தோலை ஞாயிறு திருப்பலி, ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஓசன்னா பாடல் பாடியவாறு திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
குருத்தோலை ஞாயிறு
குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலயத்துக்கு கிறிஸ்தவர்கள் திரளாக வந்தனர். அங்கு அவர்களுக்கு குருத்தோலை வழங்கப்பட்டது. ஆலயத்தில் பங்குதந்தை அலோசியஸ் துரைராஜ், உதவி பங்கு தந்தை மகேஷ் இணைந்து வழிபாடு நடத்தினர். அங்கிருந்து கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்திய வண்ணம், தென்னிந்திய திருச்சபை சென்றனர். அங்கு சேகரதலைவர் சாமுவேல் தாமஸ், உதவி குரு ஜெபஸ் ரஞ்சித், கெளரவகுரு இமானுவேல் இணைந்து இறைசெய்திகளை வழங்கினர்.
பின்னர் இரு திருச்சபை கிறிஸ்தவர்கலும் சேர்ந்து கையில் குருத் தோலை ஏந்திய அருட்தந்தையர்கள் தலைமையில் ஓசன்னா பாட்டு பாடி ஜெபம் செய்தவாறு ஊர்வலமாக புறப்பட்டு புதுரோடு, கடலையூர்ரோடு, மில்தெரு, மெயின் ரோடு வழியாக புனித சூசையப்பர் ஆலயம் வந்து சேர்ந்தனர். அங்கிருந்து சி.எஸ்.ஐ. ஆலய இறைமக்கள் தங்கள் ஆலயம் சென்றனர். புனித சூசையப்பர் ஆலயத்தில் திருப்பலி நடைபெற்றது. பின்னர் சாலக்குடி டிவைன் சென்டர் அருட்சகோதரர் ராஜேந்திரன் தியானம் நடத்தினார். மாலை 6 மணிக்கு திருப்பலியுடன் விழா நிறைவு பெற்றது.
ஆறுமுகநேரி
ஆறுமுகநேரி புனித சவேரியார் ஆலயத்தில் இருந்து குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை கையிலேந்தி ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்துக்கு பங்கு தந்தை அலாசியஸ் அடிகளார் தலைமை தாங்கினார். ஆலயம் முன்பு தொடங்கிய ஊர்வலம் மேட்டுவிளை, மடத்துவிளை பகுதி வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. தொடர்ந்து புனித சவேரியார் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதனை பங்குதந்்தை நிறைவேற்றினார். இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
காயல்பட்டினம்
இதே போல் காயல்பட்டினம் புனித முடியப்பர் ஆலயத்தில் குறுத்தோலை ஞாயிறு திருப்பலி மற்றும் குருத்தோலை ஊர்வலம் நடைபெற்றது. இதனை கொம்புத்துறை பங்கு தந்தை பிரதீப் அடிகளார் நிறைவேற்றினார்.
இதைப்போல் சிங்கித்துறை புனித செல்வமாதா ஆலயத்திலும் குருத்தோலை ஊர்வலம் நடைபெற்றது. இதை பங்கு தந்தை ஷிபாகர் அடிகளார் நிறைவேற்றினார்.
சேர்ந்தபூமங்கலம்
சேர்ந்தபூமங்கலம் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் பங்குத்தந்தை செல்வன் அடிகளார் தலைமையில் திருப்பலி மற்றும் குருத்தோலை ஊர்வலம் நடைபெற்றது.
புன்னக்காயல் புனித ராஜகன்னி மாதா ஆலயத்தில் பங்குத்தந்தை பிராங்கிளின் அடிகளார் தலைமையில் திருப்பலி மற்றும் குருத்தோலை ஊர்வலம் நடைபெற்றது. இதில் உதவி பங்கு சந்தை செபஸ்டின் அடிகளார் மற்றும் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
பழையகாயல்
பழைய காயல் புனித பரிபூரணமாதா ஆலயத்தில் பங்குத்தந்தை வெனிஸ்டன் அடிகளார் தலைமையில் குருத்தோலை ஊர்வலமும், சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது. இதில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
உடன்குடி
உடன்குடி கிறிஸ்தியா நகர சேகரம் சார்பில் குருத்தோலை ஊர்வலம் ேநற்று காலையில் ஆலயம் முன்பு இருந்து புறப்பட்டது. ஓசன்னா என்ற பாடலுடன் புறப்பட்ட ஊர்வலத்தில் சபை மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். உடன்குடி வடக்கு பஜார், சத்தியமூர்த்தி பஜார், சந்தையடி தெரு வழியாக ஆலயத்தை வந்து அடைந்தது.
இதேபோல பண்டாரஞ்செட்டிவிளை சேகரம் சார்பில் சிறிஸ்தவ ஆலயம் முன்பு இருந்து புறப்பட்ட ஊர்வலம் முக்கிய வீதிகள் மற்றும் புதுமனை வழியாக மீண்டும் ஆலயம் சென்றடைந்தது.
மேலும், வேதகோட்டை விளை, சந்தையடியூர், தங்கையூர், கொட்டங்காடு போன்ற கிராமப்புற பகுதியிலும் குருத்தோலை ஊர்வலம் நடைபெற்றது.