கள் இறக்குவோர் பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கள் மீதான தடையை நிரந்தரமாக நீக்கக்கோரி கள் இறக்குவோர் பாதுகாப்பு இயக்கத்தினர் தஞ்சையில், ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தஞ்சாவூர்;
கள் மீதான தடையை நிரந்தரமாக நீக்கக்கோரி கள் இறக்குவோர் பாதுகாப்பு இயக்கத்தினர் தஞ்சையில், ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டம்
தஞ்சை ரெயிலடியில் தமிழ்நாடு கள் இறக்குவோர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் தலைமை தாங்கினார்.ஆர்ப்பாட்டத்தில், இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு கள் இறக்குவோர் மீது தமிழ்நாடு மதுவிலக்கு சட்டப்பிரிவின்படி வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கும் நடைமுறை வழக்கமாக இருந்து வருகிறது. உலகின் பல நாடுகளும், இந்தியாவில் பல மாநிலங்களும் கள்ளை உணவாக ஏற்றுக்கொண்டு உள்ளது.ஆலை சாராயத்திற்கும், அயல்நாட்டு மதுவுக்கும் தமிழ்நாட்டில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நம் மண் சார்ந்த மரபு சார்ந்த மென்பானமான கள் மீது தமிழக அரசு தடை செய்து வைத்திருப்பது ஏன்?. தமிழ்நாட்டில் கள் மீதான தடையை அரசு நிரந்தரமாக நீக்க வேண்டும்.
அடக்கு முறை
கள் இறக்குவோர் மீது தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின்படி விஷ சாராயம் போன்றவற்றை விற்பனைக்கு வைத்திருந்தார்கள் என பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி சிறையில் அடைக்கும் அடக்குமுறையை அரசு கைவிட வேண்டும். பல தலைமுறைகளாக நேர்மையான முறையில் எவ்வித கலப்படமும் செய்யாமல் கள் இறக்கும் தொழிலாளர்களை போலீஸ்துறை கொண்டு கைது செய்வதும், கள் பானைகளை உடைப்பதும், பாலைகளை வெட்டுவதும் பெண்களை இழிவாக பேசுவதும், தொழில் கருவிகளை பறிமுதல் செய்வதும் போன்ற அடக்கு முறைகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பனையேறி பாண்டியன், விழுப்புரம் வக்கீல் மலர்விழி தீபன், ஊராட்சி மன்ற உறுப்பினர் துலுக்கன்பட்டி முத்தமிழ், மதுக்கூர் பனைவெல்லம் கூட்டுறவு சங்க தலைவர் அருளானந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.