பாம்பன், கோடியக்கரை மீனவர்கள் 35 பேர் மீது வழக்குப்பதிவு


பாம்பன், கோடியக்கரை மீனவர்கள்  35 பேர் மீது வழக்குப்பதிவு
x

நடுக்கடலில் அதிகாரிகள்-மீனவர்கள் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பாம்பன், கோடியக்கரையை சேர்ந்த 35 மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தடுக்க மீனவ கிராமங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

நடுக்கடலில் அதிகாரிகள்-மீனவர்கள் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பாம்பன், கோடியக்கரையை சேர்ந்த 35 மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தடுக்க மீனவ கிராமங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மீன்பிடிக்க எதிர்ப்பு

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் மீன்பிடி சீசன் காலத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் தங்கி மீன் பிடிப்பது வழக்கம். கடந்த ஆண்டு முதல் வேதாரண்யம் பகுதியில் உள்ள சில மீனவ கிராமங்கள், வெளிமாவட்ட மீனவர்கள் கோடியக்கரையில் தங்கி மீன் பிடிப்பதால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோடியக்கரையில் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் வருகிற மார்ச் மாதம் வரை மீன் பிடித்துக்கொள்ளலாம் என்றும் அதன் பிறகு இந்த பிரச்சினைக்கு கோர்ட்டு மூலம் தீர்வு காண வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது .

நடுக்கடலில் தள்ளு முள்ளு

இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் இருந்து மீனவர்கள் ஒரு பெரிய படகில்(வல்லம்) மீன்பிடித்துக் கொண்டு கோடியக்கரை அருகே வந்தபோது படகு என்ஜின் பழுதாகி விட்டது.

அப்போது வெளியூர் மீனவர்கள் மீன்பிடிப்பதாக தகவல் அறிந்த வேதாரண்யம் மீன்வளத்துறை அதிகாரிகளும், கடலோர காவல் குழும போலீசாரும் படகில் சென்றனர். இந்த தகவல் அறிந்த கோடியக்கரை மீனவர்களும் ஒரு படகில் சென்றனர்.

நடுக்கடலில் அதிகாரிகளுக்கும், பாம்பன் மீனவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர்களுக்கு இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இருதரப்பினர் புகார்

பாம்பன் மீனவர்களுக்கு ஆதரவாக கோடியக்கரை மீனவர்களும், அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகள் பாம்பன் மீனவர்களின் படகை பறிமுதல் செய்யாமல் திரும்பி வந்தனர்.

இதுகுறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேசிடம், மீன்வளத்துறை ஆய்வாளர் நடேசராஜா புகார் கொடுத்தார். இதேபோல் கோடியக்கரை மீனவ நல உரிமைசங்கத்தினரும் புகார் அளித்தனர்.

35 மீனவர்கள் மீது வழக்குப்பதிவு

இருதரப்பு புகார்களையும் பெற்றுக்கொண்டு போலீசார் விசாரணை செய்து கோடியக்கரை மற்றும் பாம்பன் மீனவர்கள் 35 பேர் மீது கூட்டமாக வருதல், அரசு பணி செய்ய விடாமல் தடுத்தல், தகாத வார்த்தைகளால் திட்டுதல், கொலை மிரட்டல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படாமல் தடுக்க கோடியக்கரை மற்றும் ஆறுகாட்டுதுறையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Next Story