ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கைது


ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கைது
x

ஆதிதிராவிட பெண்ணை பணியில் சேர்க்க கூடாது என தெரிவித்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

ஆதிதிராவிட பெண்ணை பணியில் சேர்க்க கூடாது என தெரிவித்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை போலீசார் கைது செய்தனர்.

ஊட்டச்சத்து பணியாளர்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கோபுராஜபுரம் ஊராட்சி பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்து பணியாளராக நீலாம்பாள் என்பவர் பணியாற்றி வந்தார்.இங்கு உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது.இதனால் கோபுராஜபுரம் காலனி தெருவை சேர்ந்த ஜோதிபாசு என்பவரின் மனைவி மகேஸ்வரியை(வயது 38) நீலாம்பாள் தனக்கு உதவிக்கு வைத்துள்ளார்.

சமூக வலைதளத்தில் பரவிய ஆடியோ

இதுகுறித்து தகவல் அறிந்த கோபுராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் உமாமகேஸ்வரியின் கணவர் ரமேஷ், நீலாம்பாளை செல்போனில் தொடர்பு கொண்டு ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த மகேஸ்வரியை பணியில் சேர்க்கக்கூடாது என்று கூறியதாக தெரிகிறது.

ரமேஷ் தன்னிடம் செல்போனில் பேசியதை பதிவு செய்த நீலாம்பாள் இதுகுறித்து மகேஸ்வரியிடம் கூறி உள்ளார். இது தொடர்பான ஆடியோ சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

கைது

இதுகுறித்து மகேஸ்வரி, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தீண்டாமை ஒழிப்பு அமைப்பினர், கோபுராஜபுரம் கிராம மக்களுடன் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹரிடம் புகார் செய்தார்.

பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகை தொகுதி செயலாளர் அறிவழகன், திருமருகல் தெற்கு ஒன்றிய செயலாளர் காசிநாதன், வடக்கு ஒன்றிய அமைப்பாளர் அரவிந்த்வளவன் ஆகியோருடன் சென்று திட்டச்சேரி போலீசில் புகார் கொடுத்தார்.அதன்பேரில் போலீசார் ரமேஷ் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


Related Tags :
Next Story