கலெக்டர் அலுவலகத்தை ஊராட்சி மன்ற தலைவர்கள் முற்றுகை
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தை ஊராட்சி மன்ற தலைவர்கள் முற்றுகை
விழுப்புரம்
கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை
விழுப்புரம் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் வீராணம் மாவோ தலைமையில் செயலாளர் அருணா முருகன், பொருளாளர் வல்லம் முத்துக்குமார் உள்ளிட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் பலர் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்குள்ள நுழைவுவாயிலை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் அவர்கள், மாவட்ட கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
கோரிக்கை மனு
தமிழ்நாடு ஊராட்சித்துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவினை, அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களும் நடைமுறைப்படுத்த வேண்டும், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித்திட்டப்பணிகள் அனைத்தும் அத்திட்டத்தை செயல்படுத்தும் நிர்வாகமான ஊராட்சி நிர்வாகமே நிறைவேற்ற வேண்டும், ஜல்ஜீவன் திட்டத்தை ஊராட்சி நிர்வாகமே நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இம்மனுவை பெற்ற கலெக்டர் மோகன், இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதன் பிறகு அவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.