கம்மாபுரம் ஒன்றிய அலுவலகத்தை ஊராட்சி மன்ற தலைவர்கள் திடீர் முற்றுகை


கம்மாபுரம் ஒன்றிய அலுவலகத்தை ஊராட்சி மன்ற தலைவர்கள் திடீர் முற்றுகை
x

டெண்டர்விடும் பணிகளை முறையாக நடத்தக்கோரி கம்மாபுரம் ஒன்றிய அலுவலகத்தை ஊராட்சி மன்ற தலைவர்கள் திடீரென முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர்

கம்மாபுரம்:

கம்மாபுரம் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் வளர்மதி ராஜசேகரன் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர்கள் நேற்று கம்மாபுரம் ஒன்றிய அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டனர். கூட்டமைப்பு செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது கம்மாபுரம் ஒன்றியத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட டெண்டர் பணிகள் 9 ஊராட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் ஊராட்சி மன்ற தலைவர்களை புறக்கணித்து டெண்டர் விடுவதையும், அரசியல் தலையீடு இருப்பதை கண்டித்தும், ஊராட்சி மன்ற தலைவர்கள் முன்னிலையில் டெண்டர் விட வலியுறுத்தியும், டெண்டர் விடும் பணியை முறையாக நடத்தக் கோரியும் கோஷம் எழுப்பினர்.

மனு கொடுத்தனர்

மேலும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க டெண்டரை ஒத்திவைத்து ஊராட்சி மன்ற தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமூக தீர்வு கண்டு மறுதேதியில் டெண்டர் வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர்களை சந்தித்து மனு கொடுத்த அவர்கள் டெண்டர் விடும் பணிகளை முறையாக நடத்தா விட்டால் பலகட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம் என கூறி விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story