ராஜினாமா கடிதம் கொடுத்த ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்


ராஜினாமா கடிதம் கொடுத்த ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்
x

டாஸ்மாக் கடையை மூடக்கோரி கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ராஜினாமா கடிதம் கொடுத்தனர்.

திருவண்ணாமலை

ஆரணி

டாஸ்மாக் கடையை மூடக்கோரி கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ராஜினாமா கடிதம் கொடுத்தனர்.

டாஸ்மாக் கடை

ஆரணியை அடுத்த நடுக்குப்பம் ஊராட்சியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பள்ளி அருகில் சுமார் 100 மீட்டர் தொலைவிலேயே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.

இதனை அகற்ற வலியுறுத்தி ஊராட்சி மன்றம் சார்பாக பலமுறை கிராமசபை கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

டாஸ்மாக் கடையை அகற்றாவிட்டால் கிராம சபை கூட்டத்தை புறக்கணிக்க போவதாக பொதுமக்கள் தெரிவித்து வந்தனர்.

ராஜினாமா கடிதம்

இந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் பிரபாவதி துரை கிராமசபை கூட்டத்தை நடத்த முயன்றார்.

அப்போது ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சுகந்தி, ஏழுமலை, குணாநிதி, கீதா, பரிமளா ஆகிய 5 பேரும் டாஸ்மாக் கடையை அகற்றாததால் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக கூறி ஊராட்சி மன்ற தலைவரிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்தனர்.

கூட்டத்தில் பார்வையாளராக கலந்து கொண்ட ஆரணி தாசில்தார் ஆர்.ஜெகதீசன், மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சவீதா ஆகியோர் இதனால் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அவர்கள் கலெக்டரிடம் தொலைபேசியில் இதுகுறித்து தகவல் தெரிவித்தனர்.

டாஸ்மாக் கடை மூடல்

அதற்கு மாவட்ட கலெக்டர், இன்று முதல் டாஸ்மாக் கடை இயங்காது என தெரிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து கூட்டம் நடந்தது.

இந்த நிலையில் உறுப்பினர்களின் ராஜினாமா கடிதம் இதுவரை மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வரவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராஜினாமா கடிதம் கொடுத்த உறுப்பினர்களிடம் ஊராட்சி மன்ற தலைவர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதனிடையே சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை இன்று மூடப்பட்டு இருந்தது.

கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி உறுப்பினர்கள் ராஜினாமா செய்த சம்பவம் அந்த கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story