செஞ்சி அருகேகருப்பு பூஞ்சை நோயால் ஊராட்சி மன்ற தலைவர் சாவு


செஞ்சி அருகேகருப்பு பூஞ்சை நோயால் ஊராட்சி மன்ற தலைவர் சாவு
x
தினத்தந்தி 4 July 2023 12:15 AM IST (Updated: 4 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

செஞ்சி அருகே கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

விழுப்புரம்

செஞ்சி,

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே தடாகம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வந்தவர் செல்வராஜ் (வயது 50). இவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கேரளா மாநிலத்துக்கு சுற்றுலா சென்று வந்தாராம். அதன்பிறகு அவருடைய கண்கள் பாதிக்கப்பட்டு, திறக்க முடியவில்லை. இதனால் பதறிய குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதித்தபோது, செல்வராஜ் கருப்பு பூஞ்சை தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அறுவை சிகிச்சை மூலம் அவருடைய ஒரு கண் மட்டும் அகற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து சில நாட்களில் 2-வது கண்ணும் பாதிக்கப்பட்டதுடன், அவருடைய உடல்நிலை மேலும் மோசமானது.

இதையடுத்து செல்வராஜ் கடந்த சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு அழைத்து வரப்பட்டார். இந்த நிலையில் வீட்டில் இருந்து வந்த செல்வராஜ் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டு, ஊராட்சி மன்ற தலைவர் உயிரிழந்த சம்பவம் அக்கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த செல்வராஜ் தி.மு.க.வை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story