ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற பெண் தலைவர் கைது


ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற பெண் தலைவர் கைது
x

போளூரில் ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற பெண் தலைவர் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை

போளூர்

போளூரில் ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற பெண் தலைவர் கைது செய்யப்பட்டார்.

டேங்க் ஆபரேட்டர்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே எடப்பிறை கிராமத்தை சேர்ந்தவர் பராசக்தி (வயது 42), இவரது கணவர் கோவிந்தசாமி. இவர் எடப்பிறை ஊராட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக டேங்க் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 31.12.2022 அன்று உடல்நலக்குறைவால் இறந்து விட்டார்.

இதனைத்தொடர்ந்து பராசக்தி ஊராட்சி மன்ற பெண் தலைவர் ஜீவாவிடம் சென்று என் கணவருக்கு 4 மாதமாக சம்பளம் வரவில்லை. மேலும் அவர் செய்து வந்த பணியை எனக்கு கருணை அடிப்படையில் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

ரூ.5 லட்சம்

அதற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜீவா உனக்கு டேங்க் ஆபரேட்டர் வேலை தர வேண்டும் என்றால் ரூ.5 லட்சம் தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.

அதற்கு பராசக்தி எனக்கு ஏற்கனவே 4 மகள்கள் உள்ளனர். மேலும் நான் வறுமையில் வாடுகிறேன்.

ஏற்கனவே இதே ஊரில் டேங்க் ஆபரேட்டராக வேலை செய்து இறந்த 2 பேரின் குடும்பத்திற்கு வேலை போட்டு கொடுத்து உள்ளீர்கள். அதேபோல் எனக்கு வேலை கொடுங்கள் என்று கேட்டுள்ளார்.

அதற்கு அவர் ரூ.5 லட்சம் கொடுத்தால் வேலை, வேண்டுமென்றால் ரூ.50 ஆயிரத்தை குறைத்துக் கொண்டு 4½ லட்சத்தை கொடுங்கள். மேலும் முன்பணமாக ரூ.25 ஆயிரம் கொடுத்தால் மட்டும் உங்களுக்கு வேலை. இல்லை என்றால் வேறு ஒருவருக்கு வேலையை வழங்கி விடுவேன் என்று கூறியுள்ளார்.

புகார்

இதனால் மனவேதனை அடைந்த பராசக்தி தன் அண்ணன் ராஜனிடம் கூறியுள்ளார். அவர் ஊராட்சி மன்ற தலைவர் ஜீவாவிடம் கேட்டபோதும் அதே பதிலை கூறியுள்ளார். இதையடுத்து பணம் தயார் செய்து வருகிறோம் என்று பராசக்தி, ராஜன் ஆகியோர் சென்றுவிட்டனர்.

இதுகுறித்து பராசக்தியும், ராஜனும் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு வேல்முருகனிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அவரது தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஹேமலதா, மைதிலி மற்றும் போலீசார் பராசக்தியிடம் ரூ.25 ஆயிரத்தை கொடுத்து அனுப்பி உள்ளனர்.

ஊராட்சி தலைவர் கைது

பின்னர் போளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ஜீவாவிடம் ரூ.25 ஆயிரத்தை பராசக்தி கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஊராட்சி மன்ற தலைவர் ஜீவாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

மேலும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்து போன கோவிந்தசாமி அந்த டேங்க் கட்டுவதற்கு சொந்த இடத்தை தானமாக வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது


Next Story