ஊராட்சிமன்ற தலைவர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்
அரசு திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடைய ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கலெக்டர் முருகேஷ் பேசினார்.
அரசு திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடைய ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கலெக்டர் முருகேஷ் பேசினார்.
ஆய்வு கூட்டம்
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 69 கிராம ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் நடைபெறுகிற அனைத்து திட்ட பணிகளில் முன்னேற்றம் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலக மன்ற கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது.
கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி அனைத்து திட்டப் பணிகளில் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
பிரதம மந்திரி வீடுகள் வழங்கும் திட்டம் மற்றும் முதல்-அமைச்சர் பசுமை வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் 2016-2022-ம் ஆண்டு வரை 3,355 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் 1,592 வீடுகள் நிலுவையில் உள்ளது.
கட்டி முடிக்கப்படாமல் நிலுவையிலுள்ள பயனாளிகளின் வீடுகளை விரைந்து கட்டி முடிக்கவும், கட்ட இயலாத பயனாளிகளை கண்டறிந்து ஒப்பந்ததாரர் மூலமாகவும் வீடுகளை கட்டி முடிக்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்
100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் பணி வழங்க வேண்டும். ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஊராட்சியின் கணக்குகளை அறிந்து கொள்ள வேண்டும்.
பெண் தலைவர்கள் உள்ள ஊராட்சிகளில் அவரது கணவர் மற்றும் மகன்கள் நிர்வாகத்தில் தலையீடு இல்லாமல் முழு பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
அரசு திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடைய ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊராட்சி ஒன்றிய மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் ஒன்றியக்குழு தலைவர் கலைவாணிகலைமணி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சரண்யாதேவி, உதவி திட்ட அலுவலர்கள் அருண், இயமவர்மன், வட்டார வளர்ச்சி அலுவலர் (வீடுகள்) கருணாநிதி, ஒன்றிய ஆணையாளர் கே.சி.அமிர்தராஜ், தாசில்தார் எஸ்.சுரேஷ் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள் பணிமேற்பார்வையாளர்கள், 69 கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஏ.எஸ்.லட்சுமி நன்றி கூறினார்.