குடிநீர் கேட்டு ஊராட்சி அலுவலகம் முற்றுகை
கொடைரோடு அருகே குடிநீர் கேட்டு ஊராட்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
கொடைரோடு அருகே ஜம்புதுரைக்கோட்டை ஊராட்சியில் காமலாபுரம் கிராமத்தில் சுமார் 600-க்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தில் கடந்த 2 மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்ைல என கூறப்படுகிறது. இதனால் கிராம மக்கள் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வந்தனர். இதுகுறித்து ஜம்புதுரைக்கோட்டை ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
அதனைத் தொடர்ந்து நேற்று ஜம்புதுரைக்கோட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தை குடிநீர் கேட்டு கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாத்துரை, ஊராட்சி மன்றத் தலைவர் பவுன் தாய் காட்டு ராஜா, அம்மையநாயக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்பையா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குழாய் உடைப்பு சரிசெய்து 3 நாட்களில் குடிநீர் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.