பொரசப்பட்டில் ஆமை வேகத்தில் நடைபெறும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட பணி விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
பொரசப்பட்டில் ஆமை வேகத்தில் நடைபெறும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மூங்கில்துறைப்பட்டு,
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பொரசப்பட்டு கிராமம். இங்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு தனி கட்டிடம் இல்லாததால் கடந்த ஓராண்டுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் அருகே ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் பணிகள் தொடங்கப்பட்டதில் இருந்து ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. இங்கு ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் இல்லாததால் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் தற்காலிகமாக எங்கு செயல்படுகிறது என்று தெரியவில்லை.
விரைந்து முடிக்க...
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், இப்பகுதிகளில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஊராட்சி மன்ற தலைவரை நேரில் சந்தித்து மனுவாக கொடுக்கலாம் என்று சென்றால், அலுவலகம் எங்கு இருக்கிறது என்று தெரியவில்லை. மேலும் எந்த ஒரு குறைகளை தெரிவிக்க வேண்டும் என்றாலும் ஊராட்சி மன்ற தலைவரின் வீட்டிற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. தற்காலிகமாகவும் ஊராட்சி மன்ற அலுவலகம் செயல்படவில்லை. இதனால் இப்பகுதிகளில் உள்ள குறைகளை யாரிடம் கூறுவது என்றே தெரியவில்லை. எனவே ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட பணியை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.