பஞ்சாயத்து தலைவர் கையெழுத்தை போலியாக போட்டதாக புகார்: கலெக்டர் உத்தரவால் டாஸ்மாக் கடை மூடல்


பஞ்சாயத்து தலைவர் கையெழுத்தை போலியாக போட்டதாக புகார்: கலெக்டர் உத்தரவால் டாஸ்மாக் கடை மூடல்
x
தினத்தந்தி 11 Nov 2022 12:15 AM IST (Updated: 11 Nov 2022 1:08 AM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூர் அருகே பஞ்சாயத்து தலைவரின் கையெழுத்தை போலியாக போட்டதாக புகார் எழுந்ததை தொடர்ந்து, கலெக்டர் உத்தரவுப்படி டாஸ்மாக் கடை உடனடியாக மூடப்பட்டது.

தென்காசி

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள அரியநாயகிபுரத்தில் அருணாசலபுரம் மெயின் ரோட்டில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு ஏற்பாடுகள் நடைபெற்றன. அங்கு கடையை திறந்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்று அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து பஞ்சாயத்து கூட்டம் மற்றும் கிராமசபை கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி குறிப்பிட்ட அந்த இடத்தில் டாஸ்மாக் கடை தொடங்கப்பட்டது. இதனால் அந்த பகுதி மக்கள் அதிருப்தி அடைந்தனர்.

இதையடுத்து அரியநாயகிபுரம் பஞ்சாயத்து தலைவர் சண்முகவேல் மதுரை ஐகோர்ட்டில் அந்த கடைக்கு தடை உத்தரவு கேட்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் கடை நடத்துவதற்கு எனக்கு ஆட்சேபனை இல்லை என்று சண்முகவேல் கையெழுத்திட்ட ஒரு கடிதம் ஐகோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. அதனை பார்த்ததும் சண்முகவேல் அதிர்ச்சி அடைந்தார். காரணம், அதில் தனது கையெழுத்து போன்று போலியாக கையொப்பமிட்டு, பஞ்சாயத்து முத்திரையும் போலியாக இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து சண்முகவேல் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் டேனி அருள்சிங், வக்கீல் அணி காசி குரு ஆகியோருடன் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அதில், 2 பேர் தனது கையெழுத்து போன்று போலியாக கையெழுத்திட்டு, பஞ்சாயத்து முத்திரையை போலியாக தயார் செய்து அதில் அச்சிட்டு கடிதத்தை மாவட்ட கலெக்டரிடம் கொடுத்ததாக கூறப்பட்டிருந்தது.

இதனை பெற்றுக் கொண்ட கலெக்டர் ஆகாஷ், உடனடியாக அரியநாயகிபுரத்துக்கு சென்று டாஸ்மாக் கடையை மூட உத்தரவிட்டார். இதையடுத்து அந்த கடை மூடப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.



Next Story