ஊராட்சி செயலாளர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்
ஊராட்சி செயலாளர்கள் விடுப்பு எடுத்து போராட்டம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் உள்ள ஊரக வளர்ச்சித்துறை கிராம ஊராட்சி மன்றங்களில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்கள் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் நாளை (புதன்கிழமை) வரை 3 நாட்கள் ஊதியம் இல்லா விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போதுள்ள சூழ்நிலையில் ஊராட்சி செயலாளர்களுக்கு அதிக பணிச்சுமை உள்ளதாகவும், அவற்றை குறைக்க வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் நேரடியாக ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காலியாக உள்ள ஊராட்சி செயலாளர்கள் பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மூலம் நிரப்ப வேண்டும் ஆகிய கோரிக்கைகளை நீண்ட நாட்களாக வலியுறுத்தி ஊராட்சி செயலாளர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதுவரை அவர்களது இந்த கோரிக்கைகள் தமிழக அரசால் நிறைவேற்றப்படாததால் நேற்று முதல் நாளை வரை ஊதியம் இல்லாமல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரியலூர், ஜெயங்கொண்டம், செந்துறை, திருமானூர், தா.பழூர், ஆண்டிமடம் ஆகிய 6 ஒன்றியங்களை சேர்ந்த 178 ஊராட்சி செயலாளர்கள் விடுப்பு எடுத்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.