ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்
வடமதுரையில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.
வடமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவர் தனலட்சுமி பழனிச்சாமி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) கிருஷ்ணன், துணைத்தலைவர் தனலட்சுமி கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) வீரகடம்பு கோபு வரவேற்றார்.
வடமதுரை ஒன்றியத்தில் கிராம கல்விக்குழு, கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் மூலம் பணியமர்த்தப்பட்ட சுகாதார பணியாளர்களுக்கு ரூ.4 லட்சத்து 98 ஆயிரம் ஊதியம் வழங்குதல், அலுவலக உதவியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு சீருடை கொள்முதல் செய்த கட்டணம் வழங்குதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சின்னரெட்டியப்பட்டியில் இருந்து அக்கரைப்பட்டி மற்றும் காட்டுப்பட்டி செல்லும் சாலையில் ஆக்கிரமித்துள்ள முட்செடிகளை அகற்ற வேண்டும் என்று கவுன்சிலர் மோகன் வலியுறுத்தினார். 100 நாட்கள் பணியாளர்கள் மூலம் முட்செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். புத்தூர் பகுதியில் நடக்கிற குழந்தைகள் திருமணத்தை தடுக்கும் வகையில், ஒன்றியக்குழு உறுப்பினர் தலைமையில் குழு அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.