ராமநத்தம் அருகே ஊராட்சி மன்ற துணைத்தலைவரின் கணவர் தேசிய கொடி ஏற்றியதால் பரபரப்பு
ராமநத்தம் அருகே ஊராட்சி மன்ற துணைத்தலைவரின் கணவர் தேசிய கொடி ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநத்தம்
குடியரசு தின விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் ஊராட்சி மன்ற தலைவர்கள் தேசியக் கொடியை ஏற்றினர். அந்த வகையில் ராமநத்தம் அடுத்த மங்களூர் ஊராட்சி ஒன்றியம் தொழுதூர் ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன் தேசிய கொடியை ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன் கொடியேற்ற சென்றபோது, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ரியாஸ் பானுவின் கணவர் அன்சர் அலி, அவசர, அவசரமாக சென்று, தேசிய கொடியை ஏற்றி விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதைபார்த்து ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன் மற்றும் உறுப்பினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன் பட்டியல் இனத்தை சேர்ந்தவர். இதனால் அவரை புறக்கணிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் துணை தலைவரின் கணவர் தேசிய கொடியை ஏற்றியதாக கூறப்படுகிறது. இருப்பினும் இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.