கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளியால் பரபரப்பு
கரூரில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளியால் பரபரப்பு ஏற்பட்டது.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் 317 மனுக்கள் பெறப்பட்டன. இதில் மாற்றுத்திறனாளிகளிடம் 47 மனுக்கள் பெறப்பட்டன.
டாஸ்மாக்கை மூட வேண்டும்
கூட்டத்தில், மண்மங்கலம் வட்டம், நெரூர் தென்பாகம், ஊர் பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- எங்களது நெரூர் தென்பாகம் ஊராட்சியில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்களது நெரூர் தென்பாகம் கிராமம் என்.எஸ்.கே.நகர் சாலையில் இருந்து நெ.புதுப்பாளையம் செல்லும் வழியில் பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி கடந்த 26-ந்தேதி புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது.இந்த கடைக்கு அருகிலேயே பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. மேலும் இந்தக்கடையை மையப்படுத்தி அதனை சுற்றியுள்ள 3 கிராமங்களிலும் 3 தரப்பு சமூக மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இதனால் சமூக பிரச்சினை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தீக்குளிக்க முயற்சி
குளித்தலை வட்டம், ஏ.உடையாப்பட்டி மேற்கு பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி முத்துசாமி. இவர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்தார். அப்போது திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய் பாட்டிலை எடுத்து உடம்பில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை கண்ட போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அவரை தடுத்து நிறுத்தி, அவர் மீது தண்ணீரை ஊற்றி சமாதானம் செய்தனர்.அப்போது அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- கழுகூர் கிராமத்தில் விவசாய நிலத்தில் குறிப்பிட்ட நிலத்தை மட்டும் கிரையம் பெற்று குளித்தலை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு பெற்று சர்வே எண்ணில் உட்பிரிவு செய்து தனிப்பட்டா வழங்க வேண்டி உரிய கட்டணத்துடன் விண்ணப்பித்திருந்தேன். ஒரு வருடமாகியும் மனு மீது எந்த பதிலும் அளிக்கவில்லை. இதுகுறித்து கழுகூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் இருந்த சர்வேயரிடம் மனு குறித்து கேட்டபோது மனுவை தள்ளுபடி செய்துவிட்டதாக கூறினார். எதற்காக தள்ளுபடி செய்தீர்கள் என கேட்டதற்கு, பதில் தெரிவிக்காமல் சென்றுவிட்டார். இந்நிலையில் கிராம நில அளவையரை மிரட்டியதாக என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.