கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் பூர்வாங்க பணிகளை தொடங்கும் விதமாக நடந்த பந்தக்கால் நடும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து ெகாண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் பூர்வாங்க பணிகளை தொடங்கும் விதமாக நடந்த பந்தக்கால் நடும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து ெகாண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அருணாசலேஸ்வரர் கோவில்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா உலக பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற நவம்பர் மாதம் 24-ந் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவிற்கான கொடியேற்ற நிகழ்ச்சி நவம்பர் மாதம் 27-ந் தேதி நடக்கிறது. டிசம்பர் 6-ம் தேதி அன்று மாலை 6 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்.
திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் மகா தீபத்தன்று தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள்.
இவ்விழாவிற்கான பூர்வாங்க பணிகள் தொடங்குவதற்கான பந்தக்கால் நடும் முகூர்த்த நிகழ்ச்சி நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலின் ராஜகோபுரம் முன்பு நடைபெற்றது.
பந்தக்கால் நடும் முகூர்த்தம்
இதனையொட்டி கோவிலில் 3-ம் பிரகாரத்தில் உள்ள சம்பந்த விநாயகருக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து அங்கிருந்து கோவிலின் ராஜகோபுரம் முன்பு பந்தக்கால் கொண்டு வரப்பட்டது.
தொடர்ந்து தேரடி வீதியில் உள்ள முனீஸ்வரன் கோவில் மற்றும் பஞ்ச மூர்த்திகள் தேர்களுக்கு சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் சொல்ல மங்கள வாத்தியம் முழங்க பந்தக்கால் நடும் முகூர்த்தம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் அசோக்குமார், முன்னாள் நகர மன்ற தலைவர் இரா.ஸ்ரீதரன், அருணை கண்ஸ்ட்ரக்ஷன் துரை வெங்கட், வக்கீல்கள் பழனி, வெற்றி டிஜிட்டல் கார்த்திக், அ.தி.மு.க. நகர செயலாளர் செல்வம், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட செயலாளர் குணசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.