பால தண்டாயுதபாணி கோவிலில் பங்குனி திருவிழா


பால தண்டாயுதபாணி கோவிலில் பங்குனி திருவிழா
x

பால தண்டாயுதபாணி கோவிலில் பங்குனி திருவிழா நடைபெற்றது.

கரூர்

சின்னதாராபுரம் அருகே எலவனூரில் பழமையான பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி சோமவார திருவிழா கடந்த 7-ந்தேதி முகூர்த்தக்கால் போடுதல், உப்பு சர்க்கரை வழங்குதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையடுத்து அன்று இரவு 100-க்கு மேற்பட்ட பக்தர்கள் மாலை அணிந்து க.பரமத்தி, முன்னூர், அத்திப்பாளையம் சாலைப்புதூர் வழியாக கொடுமுடி சென்று தங்கினர். பின்னர் 9-ந்தேதி காலை கொடுமுடி ஆற்றில் தீர்த்த முத்தரித்து அங்குள்ள மண்டபத்தில் சிறப்பு பூஜை செய்தனர். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் பக்தர்கள் சாப்பிடும் சாப்பாட்டை மடி ஏந்தி வாங்கி சாப்பிட்டனர். தொடர்ந்து அன்று மாலை அங்கிருந்து புறப்பட்டு நேற்று காலை எலவனூர் காலனி விநாயகர் கோவில் வந்தடைந்தனர்.

20 அடி வேல் மூலம் அலகு குத்தி ஒரு பக்தர் எலவனூர் முருகன் கோவிலுக்கு ஆடிக்கொண்டே வந்தார். இதனை அடுத்து கொடுமுடி ஆற்றில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தத்தைக் கொண்டு விநாயகர், பாலதண்டாயுதபாணி, காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

மேலும் பாலதண்டாயுதபாணி சாமிக்கு அலங்காரம் செய்து பல்லக்கில் அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு எடுத்துச் சென்று சிறப்பு பூஜை நடந்தது.

அதன் பிறகு அங்கிருந்து மாரியம்மன் கோவில், பெருமாள் கோவில், காமாட்சி அம்மன் கோவில் ஆகிய கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜை நடந்தது. மீண்டும் பாலதண்டாயுதபாணி கோவிலுக்கு கொண்டு வந்து திருநீர் அலங்கார பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதன் பிறகு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு பொது மயார் பூஜை (அன்னதானம்) நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் செங்குந்தர் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.


Next Story