கமுதி முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழா


கமுதி முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழா
x
தினத்தந்தி 27 March 2023 12:15 AM IST (Updated: 27 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கமுதி முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ராமநாதபுரம்

கமுதி,

கமுதி முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

முத்துமாரியம்மன் கோவில்

கமுதியில் சத்திரிய நாடார் உறவின் முறைக்கு பாத்தியமான முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பொங்கல் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும்.

இதில் சுற்று வட்டாரம் மற்றும் சென்னை, நகரி, காரைக்குடி உள்பட ஏராளமான பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள்.

இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று காலை 10 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அம்பலகாரர் சக்திவேல், பங்குனி மாத டிரஸ்டி ராமச்சந்திரன் மற்றும் டிரஸ்டிகள், நிர்வாகிகள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சாமி திருவீதி உலா

இன்று முதல் நேர்த்திக்கடன் செலுத்தும் ஏராளமான பக்தர்கள் காப்புக்கட்டி விரதமிருக்க தொடங்குவர்.பின்னர் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று, சிம்மம், அன்னப்பறவை, ரிஷபம், பூதவாகனம், காமதேனு, யானை, வெள்ளிக்குதிரை உள்பட ஏராளமான வாகனங்களில் அம்மன் நகர் வலம் நிகழ்ச்சி நடைபெறும்.

தினமும் இரவு நேரத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். விழாவை முன்னிட்டு கமுதி நகர் முழுவதும் மின் அலங்கார விளக்குகளால் ஜொலிப்புடன் காணப்படுகிறது. வருகிற 4-ந்தேதி பக்தர்கள் கோவில் முன்பு பொங்கல் வைத்து வழிபாடு செய்வர்.

5-ந்தேதி அக்னிச்சட்டி, பால்குடம், பூப்பெட்டி, ஆயிரம் கண்பானை, வேல் குத்துதல், உருண்டு கொடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்கள் செய்வர்.

நேர்த்திக்கடன்

மேலும் இங்கு வினோதமான சேத்தாண்டி வேஷம் போடும் நேர்த்திக்கடன் பக்தர்கள் செலுத்துவர். அதாவது உடல் முழுவதும் சேறு பூசிக் கொண்டு, வேப்பிலையை கையில் வைத்துக் கொண்டு கோவிலை வலம் வருவர். இதனால் உடலில் உள்ள நோய்கள் குணமாகும் என்பது இவர்களின் நம்பிக்கையாகும்.

பின்னர் 7-ந்தேதி 2,008 திருவிளக்கு பூஜை நடைபெற்று, மறுநாள் 8-ந் தேதி முளைப்பாரி திருவிழாவுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.


Related Tags :
Next Story