பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம்
பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு "அரோகரா" கோஷம் எழுப்பியபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பங்குனி உத்திரம்
முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா, கடந்த 29-ந்தேதி உபகோவிலான திருஆவினன்குடியில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று முன்தினம் நடந்தது.
7-ம் நாள் திருவிழாவான நேற்று பங்குனி உத்திரம் ஆகும். இதையொட்டி தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்தனர். அவர்கள் தீர்த்தக்காவடி எடுத்து வந்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். விழாவையொட்டி மலைக்கோவிலில் உள்ள பாரவேல் மண்டபம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.
தீர்த்தவாரி
பங்குனி உத்திர விழாவின் சிகர நாளான நேற்று அதிகாலை 4.30 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் சண்முகநதியில் தீர்த்தவாரிக்கு எழுந்தருளினார். பின்னர் 6 மணிக்கு தீர்த்தம் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 9 மணிக்கு திருஆவினன்குடி கோவிலில் தந்தப்பல்லக்கில் எழுந்தருளிய முத்துக்குமாரசுவாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது.
பகல் 12 மணிக்கு மேல் மிதுன லக்னத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் வடக்கு கிரிவீதியில் இருந்த திருத்தேரில் எழுந்தருளினார். மாலை 4.30 மணிக்கு விநாயகர், அஸ்திர தேவர் தனித்தனி தேர்களில் எழுந்தருளினர். அவர்களுக்கு தீபாராதனை நடைபெற்ற பின் தேரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
இதைத்தொடர்ந்து பெரிய தேரில் எழுந்தருளியிருந்த முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. பின்னர் தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சிதறு தேங்காய் உடைக்கப்பட்டது.
தேரோட்டம்
இதையடுத்து திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் பிரகாஷ், போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், மணிமாறன், ராஜசேகரன், சித்தனாதன் சன்ஸ் உரிமையாளர்கள் சிவனேசன், தனசேகர், பழனிவேலு, கார்த்தி, செந்தில், கந்தவிலாஸ் உரிமையாளர்கள் செல்வகுமார், நவீன், நரேஷ், கண்பத் கிராண்ட் உரிமையாளர்கள் ஹரிஹரமுத்து, செந்தில், சரவணப்பொய்கை கந்தவிலாஸ் உரிமையாளர் பாஸ்கரன், பழனி வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் ஜே.பி.சரவணன், வி.பி.எஸ் கிராண்ட் ஓட்டல் உரிமையாளர் பெரியசாமி, ஜவகர் ரெசிடன்சி உரிமையாளர் மனோகரன், பழனி முருகன் ஜூவல்லரி உரிமையாளர் பாலமுருகன் மற்றும் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.
அப்போது பக்தர்கள் "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா" "வீரவேல் முருகனுக்கு அரோகரா" என்று சரண கோஷம் எழுப்பியபடி தேரை இழுத்தனர். தேர் இழுக்கும் போது அதன் பின்னால் அலங்கரிக்கப்பட்ட கஸ்தூரி யானை சென்றது. வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு கிரிவீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் வெள்ளத்தில் தேர் வலம் வந்து நிலை வந்து சேர்ந்தது. தேர் வலம் வந்தபோது தேரில் எழுந்தருளிய முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையை பக்தர்கள் பக்தியுடன் தரிசனம் செய்தனர்.
------