விசலிக்கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா
மாத்தூர் அருகே உள்ள விசலூர் விசலிக்கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விசலிக்கோவில்
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, மாத்தூர் அருகே உள்ள விசலூரில் வீசங்க நாட்டைச் சேர்ந்த 32 கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட சிறப்பு வாய்ந்த விசலிக்கோவில் உள்ளது. இங்கு விநாயகர், மார்க்கபுரீஸ்வரர், சிவகாமசுந்தரி அம்மன், சுப்பிரமணியசாமி ஆகிய சுவாமிகள் உள்ளன. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் காலை மற்றும் இரவு நேரங்களில் கோவிலை சுற்றி சாமி வீதியுலா நடைபெற்றது. விழாவின் தொடர்ச்சியாக கடந்த 3-ந் தேதி மாலை சிவகாமசுந்தரி அம்மன் உடனுறை மார்க்கபுரீஸ்வரர் மற்றும் வள்ளி-தெய்வானை உடனுறை சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர் அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தேரோட்டம்
நேற்று முன்தினம் காலை சுப்பிரமணியசாமிக்கு பால், பன்னீர், சந்தனம், மஞ்சள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக கோவிலுக்கு வந்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர். பெண்கள் தங்களது குழந்தைகளை கரும்பு தொட்டிலில் படுக்க வைத்து கோவிலை சுற்றி வந்து ேநர்த்திக்கடன் செலுத்தினர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான பங்குனி உத்திர தேரோட்டம் நேற்று காலை 5.30 மணியளவில் நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட 3 தேர்களில் விநாயகர், மார்க்கபுரீஸ்வரர், சுப்பிரமணியசாமி ஆகியோரை எழுந்தருள செய்தனர். பின்னர் வாணவேடிக்கை, அதிர்வேட்டுகள் முழங்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேர்கள் கோவிலை சுற்றி வந்து மீண்டும் நிலையை அடைந்தது. அப்போது பக்தர்கள் தேர்முன்பு தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினர்.
விடையாற்றி நிகழ்ச்சி
தொடர்ந்து காலை 8 மணிக்கு காப்பு அவிழ்த்தல், கொடி இறக்கம் மற்றும் விடையாற்றி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விசலூர், புலியூர், திருச்சி, கீரனூர், மாத்தூர், துவாக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை வீசங்க நாட்டை சேர்ந்த 32 கிராம மக்கள் செய்திருந்தனர். கோவில் தேரோட்டத்தையொட்டி மாத்தூர் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பொற்குடையார் கோவில்
அறந்தாங்கி அருகே மூக்குடி கிராம எல்லையில் பொற்குடையார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் பங்குனி உத்திர திருவிழா 5 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையடுத்து விரதம் இருந்த பக்தர்கள் பால் குடம், அக்னி காவடி, பறவை காவடி, அலகு குத்தல், கரும்புத்தொட்டி, மாவிளக்கு எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
பறவை காவடி
கந்தர்வகோட்டை ஒன்றியம் புதுப்பட்டி ஊராட்சியில் உள்ள வேம்பன்பட்டி சுப்பிரமணியர் கோவிலில் பங்குனி தேரோட்டம் நடைபெற்றது. இதையடுத்து சுற்றுவட்டார பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, பறவை காவடி உள்ளிட்ட பல்வேறு வகையான காவடிகளை எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். நேற்று இரவு தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேர் திருவிழாவையொட்டி அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கந்தர்வகோட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.