மேலூர் அருகே பயங்கரம்: மோட்டார் சைக்கிளில் வந்தவரை வழிமறித்து வெட்டிக்கொன்ற கும்பல் - காரில் தப்பி சென்றவர்களுக்கு வலைவீச்சு
மேலூர் அருகே மோட்டார் சைக்கிளில் வந்தவரை காரில் வந்த கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டது. அந்த கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
மேலூர்
மேலூர் அருகே மோட்டார் சைக்கிளில் வந்தவரை காரில் வந்த கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டது. அந்த கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
மோட்டார் சைக்கிளில் வந்தவர் படுகொலை
சிவகங்கை மாவட்டம் கட்டானிபட்டி அருகில் உள்ள பொன்குண்டுபட்டியை சேர்ந்தவர் கண்ணன்(வயது 55). இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் மதுரை மாவட்டம் மேலூர் நோக்கி வந்தார். மேலூர் அருகே ஆட்டுக்குலம் விலக்கு என்னுமிடத்தில் வந்தபோது அவரை பின் தொடர்ந்து காரில் வந்த மர்ம கும்பல் மோட்டார் சைக்கிளை வழிமறித்தது. இதனால் அவர் திகைத்து நின்றார்.
அப்போது காரில் இருந்து இறங்கிய மர்ம ஆசாமிகள், கண் இமைக்கும் நேரத்தில் கண்ணனை ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து அதே இடத்தில் அவர் துடிதுடித்து இறந்தார். பின்னர் கொலையாளிகள் காரில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மேலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆர்லியஸ்ரெபோனி, இன்ஸ்பெக்டர் மன்னவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொலை நடந்த இடத்தை பார்வையிட்டனர். கொலையாளிகள் தப்பி சென்றது குறித்து விசாரணை நடத்தினர்.
அருகிலுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கார் சென்ற வழிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து கொலையாளிகளை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன? கொடுக்கல், வாங்கல் தகராறா? வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து கண்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டப்பகலில் சினிமா காட்சி போல நடந்த இந்த கொலை சம்பவம் மேலூர் பகுதியில் ெபரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.