தூத்துக்குடியில் பனிமயமாதா ஆலய சப்பர பவனி


தூத்துக்குடி பனிமய மாதா ஆலய சப்பர பவனி வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி பனிமய மாதா ஆலய சப்பர பவனி நேற்று கோலாகலமாக நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

பனிமயமாதா ஆலயம்

ஏழுகடல் துறையுடன் எல்லோருக்கும் ஏக அடைக்கலத்தாயாக எழுந்தருளி அன்போடு ஆட்சி புரியும், திருமந்திர நகர் பனிமய மாதாவின் திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி 440-வது ஆண்டு திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் செபமாலை, மறையுரை, அருளிக்க ஆசீர், நற்கருணை ஆசீர் மற்றும் சிறப்பு திருப்பலிகள் நடத்தப்பட்டன.

அன்னையின் சப்பர பவனி

விழாவின் சிகர நிகழ்ச்சியான நேற்று அன்னையின் சப்பர பவனி நடந்தது. விழாவையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு முதல் திருப்பலி, 5.30 மணிக்கு 2-ம் திருப்பலி, 7.30 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா கூட்டு திருப்பலியும் நடந்தது.

9 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட மக்களுக்காக மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர் செல்வம் தலைமையிலும், 10 மணிக்கு உபகாரிகளுக்காக பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையிலும் சிறப்பு திருப்பலி நடந்தது. மதியம் 12 மணிக்கு சிறப்பு நன்றி திருப்பலி நடந்தது. மாலை 5 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்டம் பிஷப் அந்தோணிசாமி தலைமையில் பெருவிழா நிறைவு திருப்பலி நடந்தது. இதைத்தொடர்ந்து நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ சப்பர பவனி நடந்தது.

மக்கள் வெள்ளத்தில்...

நிகழ்ச்சியையொட்டி ஆலயத்தை சுற்றிலும் மக்கள் வெள்ளம் போல் திரண்டு இருந்தனர். ஏராளமானவர்கள் சப்பரத்தை தூக்கி வந்தனர். பவனி வந்த அன்னையை வரவேற்கும் வகையில் இருபுறமும் கட்டிடங்களில் பூக்களை தூவியும், பட்டாசுகளை வெடித்தும் உற்சாகமாக பிரார்த்தனை செய்தனர். அன்னையின் சப்பரம் மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தது.

சாதி, மத பாகுபாடு இன்றி அனைத்து தரப்பு மக்களும் வழிபாடு செய்தனர். சப்பரம் கோவிலின் பின்புறமாக பெரியகடை தெரு, கிரேட் காட்டன் ரோடு, பீச் ரோடு வழியாக ஆலய வளாகத்தை வந்தடைந்தது.

பலத்த பாதுகாப்பு

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தூத்துக்குடி பழைய பஸ்நிலையத்தில் இருந்து ஆலயத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விழாவை முன்னிட்டு நேற்று மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.


Next Story