பனிமயமாதா ஆலய திருவிழா: தூத்துக்குடியில் 10 இடங்களில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு
பனிமயமாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் 10 இடங்களில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செ்யப்பட்டுள்ளதாக, போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது-
பனிமயமாதா ஆலய திருவிழா
தூத்துக்குடி பனிமய மாதா ஆலய 16-வது தங்கத்தேர் திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழா நாட்களில் முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் போது, பொதுமக்கள் அதிக அளவில் வருவார்கள். இதனால் இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை), வருகிற 3-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை பொதுமக்கள் தங்கள் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்த தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சார்பில் 10 இடங்களில் வாகனம் நிறுத்தும் இடம் வசதி செய்யப்பட்டு உள்ளது.
எங்கெங்கு நிறுத்தலாம்
அதன்படி தூத்துக்குடி வ.உ.சி சாலை (டபிள்யூ.ஜி.சி. ரோடு) வழியாக மாதா கோவில் வரும் வாகனங்கள் பழைய மாநகராட்சி அலுவலக சந்திப்பு, வடக்கு காட்டன் ரோடு, ரெயில்வே ஸ்டேஷன் ரோடு வழியாக சென்று புனித பிரான்சிஸ் சேவியர் பள்ளி மைதானத்தில் இரண்டு சக்கர வாகனங்களையும், ரெயில்வே ஸ்டேஷன் ரோடு, பிரெஞ்சு சேப்பல் தெரு வழியாக சென்று சின்னக்கோவில் வளாகத்தில் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும் நிறுத்தலாம். அதே போன்று வ.உ.சி சாலை வழியாக பழைய மாநகராட்சி அலுவலக சந்திப்பு, தீயணைப்பு நிலைய சந்திப்பு, தெற்கு காட்டன் ரோடு வழியாக சென்று செயின்ட் பீட்டர் கோவில் தெருவில் உள்ள லசால் பள்ளி மைதானத்தில் இரண்டு சக்கர வாகனங்களையும், தெற்கு காட்டன் ரோடு, பி.பி.எம்.டி. சந்திப்பு வழியாக சென்று ஜார்ஜ் ரோட்டில் உள்ள சால்ட் அலுவலக வளாகத்தில் இரண்டு சக்கர வாகனங்களையும், தருவை மைதானத்தில் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும், பி.பி.எம்.டி. சந்திப்பு வழியாக சென்று லயன்ஸ் டவுனில் உள்ள காரப்பேட்டை ஆண்கள் பள்ளி மைதானத்தில் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும் நிறுத்தலாம்.
கடற்கரை சாலை
தூத்துக்குடி வடக்கு கடற்கரை சாலை வழியாக மாதா கோவில் வரும் வாகனங்கள் வடக்கு கடற்கரை சாலையில் உள்ள கால்டுவெல் பள்ளி மைதானத்தில் இரண்டு சக்கர வாகனங்களையும், வடக்கு கடற்கரை சாலையில் உள்ள முத்துநகர் கடற்கரையில் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும், வடக்கு கடற்கரை சாலையில் உள்ள துறைமுகம் சமுதாய நலக்கூடம் வளாகத்தில் இரண்டு சக்கர வாகனங்களையும், வடக்கு கடற்கரை சாலை, இந்திரா காந்தி சிலை சந்திப்பு, ரெயில்வே ஸ்டேஷன் ரோடு, பிரெஞ்சு சேப்பல் தெரு வழியாக சென்று சின்னக்கோவில் வளாகத்தில் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும் நிறுத்தலாம். தெற்கு கடற்கரை வழியாக மாதா கோவில் வரும் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை மீன்பிடி துறைமுகம் வளாகத்தில் நிறுத்த வேண்டும். மீன்பிடி துறைமுகத்துக்கு வடக்கே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.
ஒத்துழைப்பு
தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு வழியாக மாதா கோவில் வரும் வாகனங்கள் ஜார்ஜ் ரோட்டில் உள்ள தருவை மைதானத்தில் 2 சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும், பி.பி.எம்.டி. சந்திப்பு வழியாக சென்று ஜார்ஜ் ரோட்டில் உள்ள சால்ட் ஆபீஸ் வளாகத்தில் இரண்டு சக்கர வாகனங்களையும், பி.பி.எம்.டி. சந்திப்பு, தெற்கு காட்டன் ரோடு வழியாக சென்று செயின்ட் பீட்டர் கோவில் தெருவில் உள்ள லசால் பள்ளி மைதானத்தில் இரண்டு சக்கர வாகனங்களையும், பி.பி.எம்.டி. சந்திப்பு வழியாக சென்று லயன்ஸ் டவுனில் உள்ள காரப்பேட்டை ஆண்கள் பள்ளி மைதானத்தில் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும் நிறுத்துவதற்கும் போலீஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
எனவே திருவிழாவுக்கு வருகைதரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரங்களில் நிறுத்தாமல், அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள வாகன நிறுத்தங்களில் நிறுத்தி போலீசாருக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.