பின்னலாடை உற்பத்தி 60 சதவீதம் முடக்கம்
திருப்பூர்,
வந்தாரை வாழ வைக்கும் ஊராக திருப்பூர் விளங்கி வருகிறது. படிக்காதவர்கள் முதல் படித்தவர்கள் வரை அனைவருக்கும் வேலைவாய்ப்பை அள்ளி வழங்கியதால் தமிழகம் மட்டுமில்லாமல் வெளிமாநில தொழிலாளர்களுக்கும் வாழ்வளித்து வருகிறது. பின்னலாடை தொழிலே இங்கு பிரதானம். உள்நாடு மற்றும் வெளிநாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
பின்னலாடை தயாரிப்பு என்பது நிட்டிங், பிரிண்டிங், சாய ஆலை, பவர் டேபிள், காஜாபட்டன் உள்ளிட்ட பல்வேறு ஜாப்ஒர்க் தொழில்களுடன் இணைந்தது ஆகும். ஒன்றோடொன்று சங்கிலி தொடர் போல் இணைந்து செயல்படுகிறது. ஆடை தயாரிப்புக்கு பருத்தி நூல் மிகவும் முக்கியம். இந்த நூல் விலை அபரிமிதமாக உயர்ந்து விட்டது. 18 மாதங்களில் 2 மடங்கு அதிகரித்து விட்டது. அதிலும் குறிப்பாக கடந்த ஏப்ரல் மாதம் கிலோவுக்கு ரூ.40-ம், மே மாதம் ரூ.30-ம் உயர்ந்தது. இதனால் பின்னலாடை உற்பத்தியாளர்கள் நிலைகுலைந்து போனார்கள்.
மார்ச் மாத நூல் விலை
உள்நாட்டில் பருத்தி பற்றாக்குறையே நூல் விலையேற்றத்துக்கு காரணம் என்றார்கள். இதனால் பருத்தி, நூல் ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் பஞ்சை சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி 2 நாள் உற்பத்தி நிறுத்தத்தை திருப்பூர் பின்னலாடை துறையினர் மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து பஞ்சை இறக்குமதி செய்வதற்கான வரியை வருகிற செப்டம்பர் மாதம் வரை நீக்கியது. இருப்பினும் உரிய பலனில்லை.
இந்தநிலையில் நேற்று இந்த மாதத்துக்கான நூல் விலை அறிவிக்கப்பட்டது. நூல் விலையில் மாற்றம் ஏதும் இல்லை. கடந்த மாத நூல் விலை அப்படியே தொடர்வதாக நூற்பாலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கு இது எந்தவித பயனையும் தராது என்று கவலையுடன் தெரிவிக்கிறார்கள். அதாவது நூல் விலை கிலோவுக்கு ரூ.70 குறைய வேண்டும். மார்ச் மாத நூல் விலை அப்படியே தொடர்ந்தால் தான் புதிய ஆர்டர்களை எடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.
60 சதவீதம் உற்பத்தி பாதிப்பு
தற்போதைய நிலையில் திருப்பூர் பின்னலாடை உற்பத்தி 60 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு நிறுவனங்கள் 90 சதவீதமும், பெரிய நிறுவனங்கள் 10 சதவீதமும் உள்ளன. இந்த நூல் விலையேற்ற பிரச்சினையிலும் பெரிய நிறுவனங்கள் மட்டுமே தாக்குப்பிடித்து உற்பத்தியை தொடர்ந்துள்ளன.
அதாவது பஞ்சை வாங்கி நூல் உற்பத்தி செய்வது முதல் ஆடை தயாரிப்பு வரை ஒரே இடத்தில் அனைத்து பணிகளையும் செய்து முடிக்கும் அளவுக்கு உள்ள பெரிய நிறுவனங்களுக்கே இது சாதகமாகவும், ஆர்டர்கள் அதிகம் வருவதாகவும் தெரிவித்துள்ளனர். அதனால் நூல் விலை இன்னும் குறைந்தால் மட்டுமே பின்னலாடை உற்பத்தி பழைய நிலைக்கு திரும்பும். அதுவரை முடக்க நிலையே தொடரும் என்கிறார்கள்.
ரூ.70 குறைய வேண்டும்
இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம் கூறியதாவது:-
ஜூன் மாதம் நூல் விலையில் மாற்றமில்லை என்று அறிவித்துள்ளனர். இது ஓரளவுக்கு நிம்மதியை அளிக்கிறது. வரவேற்கிறோம். ஆனால் தற்போதை நூல் விலையில் புதிய ஆர்டர்களை எடுத்து ஆடை உற்பத்தியில் இறங்குவது என்பது பெரிய சவால் நிறைந்தது. மார்ச் மாத நூல் விலை தற்போது இருந்தால் தான் புதிய ஆர்டர் எடுத்து செய்து பழைய நிலைக்கு திரும்ப முடியும். அப்படி பார்த்தால் தற்போதை நூல் விலை கிலோவுக்கு ரூ.70 குறைந்தால் தான் பயன் கிடைக்கும்.
வெளிநாட்டு ஆர்டர்கள் குறைவாகவே உள்ளது. ஆர்டர் எடுக்க தயக்கம் காட்டுகிறார்கள். குறைந்தபட்சம் அடுத்த மாதமும் நூல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தால் தான் புதிய ஆர்டர்களை எடுத்து செய்யலாம் என்ற முயற்சியை நாங்கள் மேற்கொள்ள முடியும். இல்லாவிட்டால் அதுவும் சிரமம் தான். வெளிநாடுகளில் இருந்து பஞ்சை இறக்குமதி செய்ய வரியை தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அடுத்த மாதமே அந்த பஞ்சை பெற்று நூல் உற்பத்தி செய்து நமக்கு கிடைக்கும். பருத்தி, பஞ்சுக்கு தற்காலிக தடை விதிக்க வேண்டும். நூல் ஏற்றுமதியை முறைப்படுத்த வேண்டும். யூக வணிகத்தில் இருந்து பஞ்சை நீக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறோம். நூல் விலை குறைப்பு நடவடிக்கையில் உரிய முன்னேற்றம் இல்லை. மத்திய அரசு நடவடிக்கை எடுத்து பின்னலாடை தொழிலை காப்பாற்றும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பயன் இல்லை
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் (டீமா) முத்துரத்தினம் கூறியதாவது:-
பஞ்சு விலையேற்றத்தால் நூல் விலை உயர்வு என்று நூற்பாலை உரிமையாளர்கள் தெரிவிக்கிறார்கள். பருத்தி பஞ்சை 1 கேண்டி ரூ.42 ஆயிரம் இருந்தபோது வாங்கி இருப்பு வைத்துள்ளனர். தற்போது பஞ்சு 1 கேண்டி ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஆனால் ஏற்கனவே பழைய விலைக்கு வாங்கி இருப்பு வைத்துள்ள பஞ்சுக்கு, புதிய விலையை கணக்கிட்டு நூல் விலையை உயர்த்தி விற்பனை செய்கிறார்கள். இது ஏற்புடையது அல்ல. இந்த மாதம் நூல் விலை உயர்வில் மாற்றமில்லை என்றாலும் இதனால் பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கு எந்தவித பயனும் இல்லை.
ஏற்கனவே நூல் விலை மிகவும் உயர்ந்து விட்டது. கிலோவுக்கு ரூ.70 குறைத்தால் மட்டுமே நூலை வாங்கி பின்னலாடைகளை உற்பத்தி செய்ய முடியும். கடந்த 18 மாத காலமாக நெருக்கடி தொடர்ந்தது. இப்போது நடவடிக்கை எடுத்தாலும் அதன் பயன் நமக்கு கிடைக்காது. நிலைமை கைமீறி சென்று விட்டது. திருப்பூரில் 60 சதவீத ஆடை உற்பத்தி பாதிக்கப்பட்டு விட்டது. சிறு, குறு, நடுத்தர உற்பத்தி நிறுவனங்களில் பனியன் உற்பத்தி முடங்கி விட்டது. தொழிலாளர் வேலையிழப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டு விட்டது.
செயற்கை இழை ஆடைகள்
பருத்தி ஆடை உற்பத்தியே திருப்பூரில் பிரதானமாக இருந்தது. ஆனால் பஞ்சு விலை உயர்வு, நூல் விலை உயர்வு போன்ற காரணங்களால் ரேயான், பாலியஸ்டர் என செயற்கை நூழிலை ஆடைகளை உற்பத்தி செய்வதில் முனைப்பு காட்ட தொடங்கியுள்ளனர். உள்நாட்டு ஆடை வியாபாரிகள் கூட பருத்தி ஆடைகளை தவிர்த்து செயற்கை இழை ஆடைகளை செய்து கொடுக்க கேட்கிறார்கள். ஒரு கட்டத்தில் பருத்தி ஆடை உற்பத்தி குறைந்து செயற்கை இழை ஆடை உற்பத்தி அதிகரிக்கும். இது பருத்தி விவசாயிகள் வரை பாதிக்கும். மத்திய அரசு இதை உணர வேண்டும். நூல் விலையை குறைத்து அரசு உதவிக்கரம் நீட்டும்பட்சத்தில் தான் பின்னலாடை உற்பத்தி திருப்பூரில் பழைய நிலைக்கு திரும்பும். வெளிநாட்டு பஞ்சு வந்து தொழில் நடப்பது என்பது இன்னும் 6 மாதத்தை எட்டிவிடும். அதற்குள் தொழிலாளர்கள் வேலையிழப்பை சந்திப்பார்கள். இதற்கு மத்திய, மாநில அரசுகள் உடனடி கவனம் செலுத்தி தீவிரம் காட்டி பின்னலாடை தொழிலை காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.