உடன்குடியில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்


உடன்குடியில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 25 Jun 2023 12:15 AM IST (Updated: 25 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

உடன்குடியில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி

உடன்குடி:

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவையொட்டி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் உடன்குடி டி.டி.டி.ஏ. மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாவட்ட கலெக்டர் கி.செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். தூத்துக்குடி சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பொற்செல்வன் வரவேற்றார். தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய அளவில் சுகாதாரம் மிக்க மாநிலங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழிக்கேற்ப, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு, வருமுன் காப்போம், காப்பீட்டு திட்டங்கள், மக்களைத்தேடி மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்தியாவிலேயே சுகாதார திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாகவும், முதன்மையாகவும் திகழ்வதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா மற்றும் தேசிய சுகாதார இணைய தலைமை அதிகாரிகள் பாராட்டி உள்ளனர்.

இந்த முகாமிலும் அனைத்து தரப்பு நோய்களுக்கும் உயர்தரத்தில் மருத்துவ பரிசோதனைகள், சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. இதனை மக்கள் பயன்படுத்தி நலமான, ஆரோக்கியமான வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கையால் தமிழகம் இன்று தலை நிமிர்ந்து நிற்கிறது திட்டங்களை அறிவித்த பின்னர் அவை மக்களுக்கு முழுமையாக சென்றடைய வேண்டும் என்பதில் அவர் தனிக்கவனம் செலுத்தி வருகிறார். அவருக்கு நாம் என்றும் எப்போதும் ஆதரவாக இருக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.

நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், மாவட்ட கூடுதல் கலெக்டர் தாக்கரே சுபம் ஞானவேல், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சிவக்குமார், மாவட்ட மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் கற்பகம், துணை இயக்குனர்கள் சுந்தரலிங்கம், யமுனா, திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருசந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story