அலட்சியப் போக்கால் குப்பைத்தொட்டியாகும் பி.ஏ.பி. பாசனக்கால்வாய்கள்


அலட்சியப் போக்கால் குப்பைத்தொட்டியாகும் பி.ஏ.பி. பாசனக்கால்வாய்கள்
x

பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் பி.ஏ.பி. பாசனக் கால்வாய்கள் குப்பைத் தொட்டிகளாக மாறி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

திருப்பூர்

பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் பி.ஏ.பி. பாசனக் கால்வாய்கள் குப்பைத் தொட்டிகளாக மாறி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

உணவு உற்பத்தி தொழில்

திருப்பூர், கோவை மாவட்ட விவசாயிகளின் முக்கிய நீராதாரமாக திருமூர்த்தி அணை உள்ளது. பி.ஏ.பி. தொகுப்பணைகள் மற்றும் பாலாற்றின் மூலம் பெறப்படும் நீர் அணையில் சேமிக்கப்பட்டு பாசனத்துக்காகவும், குடிநீருக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. பாசனத்துக்கென அமைக்கப்பட்டுள்ள கால்வாய்கள் இந்த பாசனத் திட்டத்தின் உயிர் நாடியாக உள்ளது.

இந்தநிலையில் பாசனக் கால்வாய்கள் பலவும் பலவகைகளில் பாழாக்கப்பட்டு வருவது வேதனையளிப்பதாக உள்ளது.

அந்தவகையில் உடுமலை கால்வாய் மூலம் 58,282 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த கால்வாய் செல்லும் வழித்தடத்தில் உள்ள குடியிருப்புகளிலுள்ள குப்பைகள் கால்வாயில் கொட்டப்படுவதால் பாழாகி வருகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

வாய்க்காலில் கொட்டப்படும் கழிவுகள்

விவசாயத் தொழிலுக்கு முக்கியமாக உள்ள பாசன நீரைக் கொண்டு சென்று விவசாயிகளிடம் சேர்ப்பதற்கு பாசனக் கால்வாய்கள் கைகொடுக்கிறது. திருமூர்த்தி அணையிலிருந்து புறப்படும் உடுமலை கால்வாயின் வழித்தடத்தில் உடுமலை நகராட்சி மட்டுமல்லாமல் அதனை ஒட்டிய ஊராட்சிகளான போடிப்பட்டி, பெரியகோட்டை, கணக்கம்பாளையம் பகுதிகள் உள்ளது. இங்கு புதிது புதிதாக பல குடியிருப்புகள் உருவாக்கப்பட்டு வருகிறது. இதனால் தினசரி டன் கணக்கில் குப்பைகள் குவிகிறது. இந்த குப்பைகளை முறையாக அப்புறப்படுத்துவதில் உள்ளாட்சி நிர்வாகங்கள் அலட்சியம் காட்டி வருகிறது.

ஒருசில பகுதிகளில் வாய்க்கால் கரையில் குப்பைத் தொட்டிகள் வைப்பது, குப்பைகளைக் குவித்து வைப்பது போன்ற செயல்களில் உள்ளாட்சி நிர்வாகங்கள் ஈடுபடுகிறது. மேலும் அருகிலுள்ள குடியிருப்புவாசிகள் பாசனக் கால்வாயை மெகா சைஸ் குப்பைத் தொட்டியாகவே பார்க்கிறார்கள். இதனால் பாலிதீன் கழிவுகள், பழைய பஞ்சு மெத்தைகள், துணிகள், ரெக்சின் பைகள், உணவுக் கழிவுகள் உள்ளிட்ட அனைத்து விதமான கழிவுகளையும் வாய்க்காலில் கொட்டி விட்டுச்செல்கின்றனர். சில பகுதிகளில் குப்பை கொட்டுவதைத் தடுக்க முயற்சித்த விவசாயிகளிடம் குடியிருப்புவாசிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவங்களும் நடைபெற்றுள்ளது.

பாழாகும் விளை நிலங்கள்

இதனால் ஒவ்வொரு முறை தண்ணீர் திறப்புக்கு முன்னரும் பொதுப்பணித்துறையினர் கால்வாயை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடுகின்றனர். ஆனால் அதற்கென ஒதுக்கப்படும் நிதி புதர்ச்செடிகளை அகற்றுவதற்கே போதுமானதாக இல்லாததால் குப்பைகளை அகற்றுவது கேள்விக்குறியாகி விடுகிறது. இதனால் குப்பைக்கழிவுகள் மற்றும் பாலிதீன் கழிவுகள் ஷட்டர்களில் சிக்கி அடைப்பை ஏற்படுத்துவதால் பாசன நீர் வீணாகிறது. மேலும் கழிவுகள் விளைநிலங்களில் சென்று சேர்வதால் விளைநிலங்கள் பாழாகிறது.

பாசனக் கால்வாய்கள் என்பது பல ஆயிரக்கணக்கான விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரம் என்பதை அனைவரும் உணர வேண்டும். மேலும் பாசனக் கால்வாய்களின் முக்கியத்துவம் குறித்து குடியிருப்புவாசிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி கால்வாய்களில் குப்பை கொட்டுவதை முற்றிலுமாக தடுக்க வேண்டும்.

மேலும் கடந்த காலங்களில் மடைகளுக்கான ஷட்டர்கள் திறப்பு, நீர்ப் பங்கீடு, தண்ணீர் திருட்டைத் தடுக்க கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு பாசனத் திட்டத்தில் முக்கிய பங்கு வகித்த லஸ்கர் எனப்படும் பொதுப்பணித்துறை கால்வாய் பராமரிப்பு பணியாளர்களை மீண்டும் நியமிப்பதற்கான வாய்ப்புகள் மற்றும் அதன் சாதக, பாதகங்கள் குறித்து ஆய்வு செய்யலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story