ஈரோடு பாப்பாத்திக்காடு பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகம்
ஈரோடு பாப்பாத்திக்காடு பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பாலமுருகன் கோவில்
ஈரோடு முனிசிபல் காலனி பாப்பாத்திக்காடு 2-வது வீதியில் பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோவில் உள்ளது. மேலும் இங்கு செல்வகணபதி, தர்மசாஸ்தா, அம்பிகை சமேத கைலாசநாதர் மற்றும் லட்சுமி நாராயணர், ராம பக்த ஆஞ்சநேயர் சன்னதிகளும் உள்ளன. இந்த கோவிலின் திருப்பணிகள் முடிந்த நிலையில் கும்பாபிஷேக விழா கடந்த 4-ந்தேதி காலை கணபதி பூஜையுடன் தொடங்கியது.
மேலும் அன்று மாலை நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம் நடந்தது. மாலையில் முதல் கால யாக பூஜை நடந்தது. நேற்று முன்தினம் காலை 8.30 மணி அளவில் 2-ம் கால யாக பூஜையும், மாலை 5 மணிக்கு 3-ம் கால யாக பூஜையும் நடந்தது. நேற்று அதிகாலை 4 மணிக்கு 4-ம் கால யாக பூஜை நடைபெற்றது.
கும்பாபிஷேகம்
அதைத்தொடர்ந்து 5 மணிக்கு கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவில் சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.
இதையொட்டி பாலமுருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (வியாழக்கிழமை) முதல் மண்டல பூஜைகள் தொடங்க உள்ளது.