காகிதமில்லா கணினிவழி கோப்புகள்


காகிதமில்லா கணினிவழி கோப்புகள்
x

ராணிப்பேட்டையில் வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலகங்களில் கோப்புகள் தேங்குவதை தவிர்க்க காகிதமில்லா கணினி வழி கோப்புகள் நடைமுறைபடுத்தப்படுவதாக கலெக்டர் வளர்மதி தெரிவித்தார்.

ராணிப்பேட்டை

பயிற்சி வகுப்பு

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலகங்களில் காகிதமில்லா கணினி வழியிலான கோப்புகள் (இ ஆபீஸ்) நடைமுறையினை பின்பற்றுவது தொடர்பான பயிற்சி கூட்டம் நடந்தது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசினார்.

அவர் பேசியதாவது:-

கணினி வாயிலாக

தமிழ்நாடு அரசின் மூலம் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் அனைத்து விதமான அலுவலக கோப்புகளும் கணினி வாயிலாக மட்டுமே ஒவ்வொரு அலுவலர்களிடத்திலிருந்து மற்ற அலுவலர்களுக்கும், அலுவலகத்திற்கும் ஒப்புதல் வேண்டியும், ஆணை வேண்டியும் பரிமாறப்படும். காகிதத்தால் ஆன அனைத்து கோப்புகள் கணினி வழியிலான நடைமுறையை பின்பற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதற்கட்டமாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலகங்களில் இந்த நடைமுறைகள் செயல்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகங்களில் கோப்புகளை கையாள கீழ்நிலை அலுவலகம் முதல் முதல்நிலை அலுவலர்கள் வரை அனைவரும் இந்த நடைமுறையை பின்பற்றிட வேண்டும்.

தேங்குவதை தவிர்க்க

அனைவரும் முறையாக தெரிந்து கொண்டு, சந்தேகங்கள் இருப்பின் அவற்றை மீண்டும் கேட்டறிந்து, இந்த நடைமுறையை வெற்றிகரமாக செயல்படுத்திட இப்பயிற்சியை பயன்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் கணினிகள் மற்றும் இதர உபகரணங்கள் தேவைப்படுமாயின் அது குறித்த தகவல்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தெரிவித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், நடைமுறைகளை மிக விரைவாகவும், எளிமையாகவும், மேற்கொள்ளும் வகையிலும், எவ்வித இடத்திலும், கோப்புகள் மாதக்கணக்கில் தேங்குவதை தவிர்க்கவும், இந்த நடைமுறை செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆகவே இப்பயிற்சியில் முறையாக தெரிந்து கொண்டு செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ் மற்றும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறையினர் கலந்து கொண்டனர்.


Next Story