பரந்தூர் விமான நிலையம்; பொதுமக்களிடம் கருத்து கேட்டறிந்த சீமான்


பரந்தூர் விமான நிலையம்; பொதுமக்களிடம் கருத்து கேட்டறிந்த சீமான்
x

பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் பொதுமக்களிடம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துகளை கேட்டறிந்தார்.

சென்னை,

சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் அமைக்கப்படும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளது. காஞ்சீபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட வளத்தூர், பரந்தூர், 144 தண்டலம், நெல்வாய், மேல்படவூர், மடப்புரம், மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவுக்கு உட்பட்ட ஏகனாபுரம், எடையார்பாக்கம், குணகரம்பாக்கம், மகாதேவி மங்கலம், அக்கமாபுரம், சிங்கிலிபாடி என 12 கிராம பகுதிகளில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பது சென்னைக்கு மிக முக்கிய தேவை எனவும், அங்கு விமான நிலையம் அமைந்தால் தமிழகத்தில் தொழில் வளர்ச்சியும், பொருளாதார வளர்ச்சியும் கிடைக்கும் என்று தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த 21-ந் தேதி பரந்தூரை அடுத்த ஏகனாபுரம் கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டியும், கைகளில் கருப்பு கொடி ஏந்தியும் கிராமத்தில் இருந்து ஊர்வலமாக நடந்து வந்து ஏகனாபுரம் கிராம சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே ஒன்றுகூடி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, தங்கள் பகுதியில் விளைநிலங்களையும், குடியிருப்புகளையும், கையகப்படுத்தி அகற்றி விட்டு விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பதாகைகளை கையில் ஏந்தியவாறு கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் பொதுமக்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்தார். அந்த சந்திப்பின் போது பொதுமக்களிடம் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பது தொடர்பான அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.


Next Story