கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர் சம்மதம்


கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர் சம்மதம்
x
தினத்தந்தி 22 July 2022 1:08 PM IST (Updated: 22 July 2022 1:36 PM IST)
t-max-icont-min-icon

இறுதிச்சடங்கை கண்ணியமாக நடத்துங்கள்: மாணவியின் ஆன்மா இளைப்பாறட்டும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

சென்னை,

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகள் ஸ்ரீமதி(வயது 17). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார்.

கடந்த 13-ந்தேதி விடுதியில் இருந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். பள்ளி நிர்வாக தரப்பில் ஸ்ரீமதி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.

ஆனால் இதை அவரது பெற்றோர் ஏற்கவில்லை, சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர். இதில் கடந்த 17-ந்தேதி பல்வேறு அமைப்பினர் நடத்திய போராட்டம், பெரிய கலவரத்தில் முடிந்தது. மாணவி மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் உடல் கடந்த 14-ந்தேதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

அதேவேளை, மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் தொடர்பாக அவரது தந்தை ராமலிங்கம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், ''ஓய்வு பெற்ற தடயவியல் நிபுணர், அரசு டாக்டர்கள் 3 பேரை கொண்ட குழுவை அமைத்து, மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டார்.

ஆனால், மனுதாரர் தரப்பில் பரிந்துரைக்கப்பட்ட டாக்டர்களை நீதிபதி நியமிக்காததால், இந்த உத்தரவை எதிர்த்து ராமலிங்கம், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அதேநேரம், ஐகோர்ட்டு நியமித்த டாக்டர்கள் குழு, அந்த மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்தது.

ஸ்ரீமதியின் தந்தை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தபோது, மறுபிரேத பரிசோதனை தொடர்பான கோரிக்கைகளை சென்னை ஐகோர்ட்டிலே வைக்கலாம் என தெரிவித்ததோடு, மனுவை தள்ளுபடி செய்யப்போவதாக கோர்ட்டு தெரிவித்தது. அப்போது மாணவியின் தந்தை தரப்பில் வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. மனுவை வாபஸ் பெற அனுமதியளித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதையடுத்து, மாணவி ஸ்ரீமதியின் உடலை பெற்றோர் வாங்கிக்கொள்ள உத்தரவிடும்படி காவல்துறை சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுகளின் நகல்களை அரசு தரப்பு வழக்கறிஞர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார்.

இதனை தொடர்ந்து வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி, மாணவியின் பெற்றோரிடம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

மாணவி உடல் மறுபிரேத பரிசோதனை உத்தரவில் சுப்ரீம் கோர்ட்டு தலையிடவில்லை. கோர்ட்டு மீது மனுதாரருக்கு நம்பிக்கை உள்ளதா? இந்த வழக்கில் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை திரும்பப்பெறவதில்லை என நீதிபதி காட்டமாக தெரிவித்தார்.

மறுபிரேத பரிசோதனையில் தங்கள் தரப்பில் ஒரு மருத்துவரை நியமிக்க வேண்டும் என மாணவியின் தந்தை தரப்பு வைத்த கோரிக்கையை நீதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை.

அதேவேளை, மாணவியின் 2-வது பிரேத பரிசோதனையில் புதிதாக ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதை சரிபார்த்துக்கொள்ளால் என இந்த வழக்கில் நியமிக்கப்பட்ட கீழ்பாக்கம் மருத்துவமனை தடயவியல் நிபுணர் தெரிவித்துள்ளார்.

அப்போது, பிரேத பரிசோதனை திரிக்கப்பட்டுள்ளதாக மாணவியின் தந்தை தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, இந்த விவகாரத்தில் ஒவ்வொரு முறையும் பிரச்சினையை ஏற்படுத்துகிறீர்கள் என சாடினார். மேலும், மாணவியின் உடலை வைத்து பெற்றோர் பந்தயம் கட்டுகின்றனர். இந்த விவகாரத்தில் அமைதியாக தீர்வு காண வேண்டும். மாணவியின் பெற்றோர் மீது கோர்ட்டு அனுதாபம் கொள்கிறது என்றார்.

இதையடுத்து, மாணவியின் 2 பிரேத பரிசோதனை அறிக்கைகளை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ஆய்வு செய்ய நீதிபதி உத்தரவிட்டார். 3 மருத்துவர்கள் கொண்ட குழு ஆய்வு செய்து அறிக்கையை ஒரு மாதத்திற்குள் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், மாணவியின் உடலை நாளை காலை 11 மணிக்குள் பெற்றோர் பெற்றுக்கொள்ள வேண்டும். கண்ணியமான முறையில் மாணவியின் இறுதிச்சடங்கை நடத்துங்கள். மாணவியின் ஆன்மா இளைப்பாறட்டும் என்றும் நீதிபதி ஆறுதல் தெரிவித்தார்.

இந்நிலையில், உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் உடலை பெற்றுக்கொள்ள மாணவியின் பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். நாளை காலை 7 மணிக்குள் உடலை பெற்றுக்கொண்டு மாலைக்குள் மாணவியின் உடலுக்கு இறுதிச்சடங்கை முடிக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார். நீதிபதியின் உத்தரவையடுத்து மாணவி ஸ்ரீமதியின் உடலை நாளை காலை பெற்றுக்கொள்ள அவரின் பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.


Next Story