குழந்தைகளுக்கு பெற்றோர் தன்னம்பிக்கையை கற்றுக்கொடுக்க வேண்டும் ஈரோட்டில் நடிகை சுஹாசினி பேச்சு


குழந்தைகளுக்கு பெற்றோர் தன்னம்பிக்கையை   கற்றுக்கொடுக்க வேண்டும்  ஈரோட்டில் நடிகை சுஹாசினி பேச்சு
x

நடிகை சுஹாசினி

ஈரோடு

குழந்தைகளுக்கு பெற்றோர் தன்னம்பிக்கையை கற்றுக்கொடுக்க வேண்டும் என்று ஈரோட்டில் நடிகை சுஹாசினி கூறினார்.

வல்லரசாக்கும் திறன்

மக்கள் சிந்தனை பேரவை சார்பில் ஈரோடு புத்தக திருவிழா ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. அங்கு நேற்று மாலை நடந்த சிந்தனை அரங்க நிகழ்ச்சிக்கு சென்னிமலை எம்.பி.என்.எம்.ஜெ. என்ஜினீயரிங் கல்லூரி தாளாளர் வசந்தா சுத்தானந்தன் தலைமை தாங்கினார். மக்கள் சிந்தனை பேரவை தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் நடிகை சுஹாசினி கலந்துகொண்டு "நிமிர்ந்த நன்னடை" என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பெண்கள் 65 சதவீதம் பேர் உழைக்கின்றனர். ஆண்களில் 35 சதவீதம் பேர் மட்டுமே உழைக்கிறார்கள். ஆனால் வருமானத்தில் 91 சதவீதத்தை ஆண்கள் ஈட்டுகின்றனர். 9 சதவீதத்தை மட்டுமே பெண்கள் ஈட்டுகிறார்கள். இந்தியாவில் வேலைக்கு செல்லும் 55 சதவீத பெண்களில் 45 சதவீதம் பேர் ஓராண்டிலேயே அந்த வேலையை விட்டுவிடுகின்றனர். இதற்கு வீட்டிலும், வெளியிலும், பணியாற்றும் இடத்திலும் ஏராளமான காரணங்கள் உள்ளன. நாட்டை வல்லரசாக்கும் திறன் பெண்களுக்கு உள்ளது. இதை ஆண்கள் உணர்ந்து, வேலைக்கு செல்ல பெண்களை அனுமதிக்க வேண்டும்.

தன்னம்பிக்கை

பெண்கள் தவறுகளை சுட்டிக்காட்டும் தைரியம் படைத்தவர்களாக இருக்க வேண்டும். இந்த தைரியத்தை குழந்தை பருவத்திலேயே ஏற்படுத்த பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும். திரைத்துறை குறித்து பல்வேறு விமர்சனங்கள் வருகின்றன. ஆனால் திரைத்துறையில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் 100 சதவீதம் உழைப்பை செலுத்தியவர்கள் என்பதை மறுக்க முடியாது. தற்போதைய இளைஞர்களுக்கு தோல்வியை சந்திக்கும் பக்குவம் இல்லை. அதனால் தான் முயற்சி செய்ய தயங்குகின்றனர். குழந்தைகளுக்கு பெற்றோர் தன்னம்பிக்கையை கற்றுக்கொடுக்க வேண்டும். குழந்தைகளின் நல்ல செயல்களை, முயற்சிகளை பெற்றோர் ஊக்குவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பேராசிரியை இளம்பிறை மணிமாறன் "கம்பனும் நாமும்" என்ற தலைப்பில் பேசினார்.


Next Story