ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை பெற்றோர்கள் முற்றுகை
பனப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றாததால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெமிலி
பனப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றாததால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிளாஸ்டிக் கழிவுகள்
தமிழகம் முழுதும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனால் அனைத்து பள்ளிகளையும் தூய்மை படுத்தும் பணி நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் கடந்த மே மாதம் மேற்கொள்ளப்பட்ட பிளாஸ்டிக் ஒழிப்பு பணியின்போது நெமிலி, பனப்பாக்கம் மற்றும் காவேரிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்ட சுமார் 20 டன் பிளாஸ்டிக் பொருட்கள் தற்காலிகமாக பனப்பாக்கம் அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் குவித்து வைக்கப்பட்டது.
நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டபோதும் அந்த கழிவுகள் அகற்றப்படாமல் இருந்தது. இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்ட முதல்நாள் என்பதால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்து சென்றனர். அப்போது பள்ளி வளாகத்தில் சுகாதாரமற்ற முறையில் குவித்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கழிவுகளை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
முற்றுகை போராட்டம்
இதுகுறித்து பெற்றோர்கள் தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்து, குழந்தைகளின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் வரை எங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என கூறி பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்ததும் கலெக்டர் பாஸ்கர் பாண்டியன் உடனடியாக அங்கிருந்து பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற உத்தரவிட்டார். அதன்பேரில் நெமிலி தாசில்தார் ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பனப்பாக்கம் பேருராட்சி பணியாளர்கள் சென்று பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.