அரசு பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்
அரசு பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டனர்.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி அருகே ஒடுவன்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இந்நிலையில் ேநற்று வட்டார கல்வி அலுவலர்கள் கலைச்செல்வி, இந்திரா தேவி ஆகியோர் ஒடுவன்பட்டி தொடக்கப்பள்ளிக்கு சென்று அங்கு பணிபுரியும் 2 ஆசிரியர்கள் தற்காலிக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கடிதம் கொடுத்தனர்.
இதுகுறித்து அறிந்த மாணவர்களின் பெற்றோர் அங்கு சென்று ஆசிரியர்களை பணியிடமாற்றம் செய்யக்கூடாது என வலியுறுத்தி பள்ளியை முற்றுகையிட்டனர். இதையடுத்து வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் சிங்கம்புணரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் ஆகியோர் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தனர். மேலும் ஆசிரியர்களின் பணி இடமாற்றத்தை ரத்து செய்வது தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரிக்கு பெற்றோர்கள் கையொப்பமிட்டு மனு அளித்தனர்.