செல்போன் வாங்கிக்கொடுத்தபின் கவனிக்காததால் சிறுவர்கள் பாதை மாறுவதை பெற்றோரால் தடுக்க முடிவதில்லை-ஆன்லைன் சூதாட்ட மோகம் குறித்து மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து
செல்போன் வாங்கிக்கொடுத்த பின் கவனிக்காததால் சிறுவர்கள் பாதை மாறுவதை பெற்றோரால் தடுக்க முடிவதில்லை என்றும், ஆன்லைன் சூதாட்ட மோகம் குறித்தும் மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
செல்போன் வாங்கிக்கொடுத்த பின் கவனிக்காததால் சிறுவர்கள் பாதை மாறுவதை பெற்றோரால் தடுக்க முடிவதில்லை என்றும், ஆன்லைன் சூதாட்ட மோகம் குறித்தும் மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
சிறுவர்கள் பாதிப்பு
நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
சமீபகாலமாக ஆன்லைன் சூதாட்டம் மற்றும் விளையாட்டு செயலிகள் அதிகரித்து வருகின்றன. இந்த விளையாட்டுகளில் ஈடுபட்ட பலர், தங்களது பணத்தை இழந்ததுடன் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. மேலும் விவாகரத்து, வறுமை மற்றும் குற்றச்சம்பவங்கள் அதிகரிக்கவும் இந்த ஆன்லைன் விளையாட்டுகள் காரணமாக அமைகின்றன.
இந்தநிலையில் இந்த ஆன்லைன் லாட்டரி எனப்படும் சூதாட்டம் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளில் அதிக அளவில் சிறுவர்களும் ஈடுபட்டு வருகின்றனர். சிறுவர்களை ஈர்க்கும் வகையில் ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பான விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன. ஆன்லைன் லாட்டரி விளையாட்டுகளுக்கான சந்தையும் தற்போது காளான்கள் போல பெருகி வருகின்றன. இந்த சூழ்நிலையில் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் விளையாட்டுகளில் ஈடுபடுவதால், குற்றவாளிகளாக மாறும் சூழல் அதிகரித்து வருகிறது.
வயது சான்றிதழ் அவசியம்
இதை தடுப்பது அவசியம். எனவே 18 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆன்லைன் லாட்டரி, விளையாட்டுகளில் ஈடுபடுவதை தவிர்க்க ஆதார் கார்டு, பிறப்பு சான்றிதழ் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்ற விதிமுறையை அமல்படுத்தலாம்.
இதன்மூலம் சிறுவர்கள் ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்குவது தடுக்கப்படும். இதுகுறித்து அதிகாரிகளுக்கு மனு அளித்தும் பலன் இல்லை. எனவே என் மனுவின் அடிப்படையில் சிறுவர்கள் ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபட ஆதார் கார்டு, பிறப்பு சான்றிதழ் விவரத்தை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
பெற்றோருக்கு பொறுப்பு அதிகம்
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் ஆன்லைன் லாட்டரி, சூதாட்டம் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுவது எப்படி? அவர்களுக்கு இந்த விளையாட்டுகள் விவரம் எப்படி தெரிகிறது? அரசாங்கத்தை காட்டிலும், குழந்தைகளின் வளர்ச்சியில் பெற்றோருக்குத்தான் அதிக பொறுப்பு உள்ளது" என்றனர்.
மேலும், பெற்றோர், தங்களின் பிள்ளைகளுக்கு செல்போன் வாங்கிக்கொடுத்துவிட்டு, அவர்கள் அதை எதற்காக பயன்படுத்துகிறார்கள் என்பதை கவனிக்க தவறிவிடுகின்றனர். அதன் காரணமாகத்தான் ஆன்லைன் விளையாட்டு, சூதாட்ட மோகத்தில் சிறுவர்கள் பாதைமாறுவதை பெற்றோரால் தடுக்க முடிவதில்லை, எனவும் கருத்து தெரிவித்தனர்.
விசாரணை முடிவில், இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.